Published:Updated:

``நீங்க யாரு... வீட்ல யாருமில்ல" - கொள்ளையனைத் தடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மயக்கமடைய வைத்த கொள்ளையன், நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Representational Image
Representational Image

சென்னை, அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி சிவகாமி (38), இந்தத் தம்பதிக்கு 15 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் தங்கராஜும் சிவகாமியும் வெளியில் சென்றுவிட்டனர். மகன் வீட்டில் இல்லை. வீட்டில் மகள், அவரின் பாட்டி புஷ்பா ஆகியோர் மட்டும் இருந்தனர்.

அம்பத்தூர்
அம்பத்தூர்

புஷ்பாவும் குளிக்கச் செல்வதாகச் சென்றுவிட்டார். அதனால் வீட்டின் ஹாலில் மகள் மட்டும் இருந்தார். அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டு அவர் வெளியில் வந்தார். வீட்டின் வெளியில் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபர், `வீட்ல யாரு இருக்கா?' என்று கேட்டுள்ளார். அதற்கு மகள், `வீட்ல யாருமில்லை. நீங்க யாரு?' என்று கேள்விகேட்டுள்ளார். இந்தச் சமயத்தில் இளைஞர் தன்கையில் வைத்திருந்த மயக்க மருந்து தடவிய கர்ச்சிப்பால் சிறுமியின் முகத்தை அழுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் அவர் மயக்கமடைந்தார்.

இதையடுத்து வீட்டுக்குள் நுழைந்த இளைஞர், பீரோவைத் திறந்து அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், 45,000 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். குளித்துவிட்டு வந்த புஷ்பா, பேத்தி மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தன்னுடைய மகன் தங்கராஜிக்கு புஷ்பா போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக தங்கராஜிம் அவரின் மனைவி சிவகாமியும் வீட்டுக்கு வந்தனர். மயங்கிய நிலையிலிருந்த மகளை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

`காலையில் கல்லூரி; மாலையில் திருட்டு!' - ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய சென்னை மாணவி

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்த அவர், நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது பீரோவிலிருந்து தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தங்கராஜ், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அம்பத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.