Published:Updated:

`அம்பேத்கர் சிலை உடைப்பு; கற்களால் தாக்கப்பட்ட காவல்நிலையம், மருத்துவமனை!’ - பதற்றத்தில் வேதாரண்யம்

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

வேதாரண்யத்தில் காவல்நிலையமும் கல்வீசி தாக்கப்பட்டது. போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்!

சிலை உடைப்பு
சிலை உடைப்பு ( prasanna venkatesh )

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னால் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணவிழா ஒன்றில் கலந்துகொள்ள தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பின் தலைவர் ஒருவர் வந்தபோது, இரு பிரிவினரிடையே போக்குவரத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு முடிந்திருக்கிறது. அந்த விஷயம்தான் நீறுபூத்த நெருப்பாக இருந்து இன்று கலவரமாக வெடித்திருக்கிறது என்கிறார்கள்.

சிலை உடைப்பு
சிலை உடைப்பு

நேற்று வேதாரண்யம் காவல்நிலையம் எதிரில் நடந்து வந்தவர்கள் மீது, ஒரு தரப்பினர் காரைவிட்டு மோதி ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள் ஒரு தரப்பினர். இதில் ராமச்சந்திரன், முருகேசன் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். பதிலுக்கு அந்தக் காரை உடைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர் மற்ற தரப்பினர். அதைத் தீயணைப்புத்துறையினர் அணைத்துள்ளனர். அதற்குள் ஏற்கெனவே தேரோட்டத்துக்காக இடமாற்றம் செய்யக்கோரி, மறுக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை மற்றொரு தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இத்தனையும் காவல் நிலையம் எதிரில்தான் நடைபெற்றது. காவல்நிலையமும் கல்வீசி தாக்கப்பட்டது. போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்

இந்தக் கலவரத்தில் காயம்பட்ட ராமச்சந்திரன், முருகேசன், பாண்டியராஜன், சரத்குமார் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கும் மோதல் ஏற்பட்டு மருத்துவமனை கண்ணாடிகள், பைக்குகள் நொறுக்கப்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ராமச்சந்திரன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

`அம்பேத்கர் சிலை உடைப்பு; கற்களால் தாக்கப்பட்ட காவல்நிலையம், மருத்துவமனை!’ - பதற்றத்தில் வேதாரண்யம்

இது சாதிக் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் எஸ்.பி துரை, நாகை எஸ்.பி ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தரங்கம்பாடி அருகே அனுமதி இன்றி மக்களால் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை ஒன்று சுமார் ஒருவருடத்துக்கு முன்னர் அப்புறப்படுத்தப்பட்டு, அரசு சார்பில் பத்திரப்படுத்தப்பட்டு வந்தது. அந்தச் சிலையை இரவோடு இரவாக உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

`அம்பேத்கர் சிலை உடைப்பு; கற்களால் தாக்கப்பட்ட காவல்நிலையம், மருத்துவமனை!’ - பதற்றத்தில் வேதாரண்யம்

பதற்றத்தைத் தணிக்கும் விதமாக இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இருதரப்பிலும் சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேதாரண்யத்தில் பேருந்துகள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.