Published:Updated:

தமிழகத்தில் அதிகரிக்கும் அம்பர்கிரிஸ் மாஃபியா!

அம்பர்கிரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
அம்பர்கிரிஸ்

மரணப் போராட்டம் நடத்தும் அந்த மீன்கள் தங்களின் முள், பற்கள் ஆகியவற்றால் திமிங்கிலத்தின் வாயைத் தாக்கிக் காயப்படுத்தும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் அம்பர்கிரிஸ் மாஃபியா!

மரணப் போராட்டம் நடத்தும் அந்த மீன்கள் தங்களின் முள், பற்கள் ஆகியவற்றால் திமிங்கிலத்தின் வாயைத் தாக்கிக் காயப்படுத்தும்.

Published:Updated:
அம்பர்கிரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
அம்பர்கிரிஸ்

மணல் மாஃபியா தொடங்கி காட்டுயிர் வேட்டை மாஃபியாக்கள் வரை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தநிலையில்தான், சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அம்பர்கிரிஸ் மாஃபியாக்கள் அதிகரித்துவிட்டன. தமிழகக் கடற்கரையை அடுத்த ஆழ்கடல் பகுதிகளில் ‘ஸ்பெர்ம் வேல்’ என்றழைக்கப்படும் திமிங்கிலங்கள் வாழ்கின்றன. இவை உமிழும் வாந்தி, `அம்பர்கிரிஸ்’ என்றழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனைத் திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பொருள் ஆண்மை சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்றெல்லாம் வதந்திகள் கடல் காற்றைவிட வேகமாகச் சுழன்றடிப்பதால், சர்வதேசக் கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு கிலோ 1.5 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது!

அம்பர்கிரிஸ்
அம்பர்கிரிஸ்

அதென்ன அம்பர்கிரிஸ்?

‘ஸ்பெர்ம் வேல்’ திமிங்கிலங்கள் சிலவகை மீன்களை விரும்பிச் சாப்பிடும். மரணப் போராட்டம் நடத்தும் அந்த மீன்கள் தங்களின் முள், பற்கள் ஆகியவற்றால் திமிங்கிலத்தின் வாயைத் தாக்கிக் காயப்படுத்தும். அப்போது இரைகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்காக திமிங்கிலத்தின் வாயில் ஒருவிதமான திரவம் சுரக்கும். இந்த திரவம் பட்டதும், அந்த மீன்கள் இறந்துவிடும். மீனும் இந்த திரவமும் சேர்ந்தே திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் செல்லும். ஒருகட்டத்தில், செரிமானம் ஆகாத உணவு, தேவையற்ற கழிவு ஆகியவற்றைத் திமிங்கிலம் வாய்வழியே வெளியேற்றும். இந்த வாந்தி உப்புத் தண்ணீரில் மிதந்து, வெயில்பட்டு காலப்போக்கில் கட்டியாக மாறிவிடும். இதுதான் அம்பர்கிரிஸ்.

ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்... கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்த சிரிபோர்ன் நியாம்ரின் என்ற பெண்மணி கடற்கரையில் வாக்கிங் போனார். அப்போது வித்தியாசமான ஒரு பொருள் அவருக்குக் கிடைத்தது. பல கைகளுக்குப் பின், அது அம்பர்கிரிஸ் என்று அடையாளம் காணப்பட்டது. அந்த நாட்டுச் சட்டத்தின்படி அம்பர்கிரிஸ் வணிகத்துக்குத் தடை இல்லாததால், இன்று சிரிபோர்ன் கோடீஸ்வரி! ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அம்பர்கிரிஸ் வணிகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அம்பர்கிரிஸ்

கடந்த ஜூலை மாதம் மைசூரு அருகே, குஷால் நகரில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஸை ஒரு கும்பல் கடத்தியபோது போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே நடத்தப்பட்ட ரெய்டிலும் 18 கிலோ அம்பர்கிரிஸ் பிடிபட்டது. இந்தநிலையில்தான் தமிழகத்தில் அம்பர்கிரிஸைக் கடத்தும் மாஃபியாக்கள் அதிகரித்துவிட்டதாகச் சம்பவங்களை அடுக்குகிறார்கள் வனத்துறை அதிகாரிகள்...

“கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஸை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று இடங்களில் அம்பர்கிரிஸ் பிடிபட்டது. தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 23 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஸைப் பறிமுதல் செய்த போலீஸார், மூவரைக் கைதுசெய்துள்ளனர். கடந்த வாரம் சென்னை திருப்போரூரில் ‘அம்பர்கிரிஸ் விற்பனைக்கு’ என்று ஆன்லைனில் விளம்பரம் செய்த ஆசாமிகளை நைசாகப் பேசி வரவழைத்த வனத்துறையினர், 13 கிலோ அம்பர்கிரிஸைக் கைப்பற்றினர். அடுத்த சில நாள்களில் சென்னை மாங்காடு அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 44 கோடி ரூபாய் மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டு நால்வர் கைதுசெய்யப்பட்டனர். தங்கம், வெள்ளி, போதைப்பொருள்கள் கடத்தலுக்கு நடுவே இப்படி அம்பர்கிரிஸ் கடத்தலும் அதிகரித்து விட்டது. அதன் சர்வதேச மதிப்பு உயர்ந்து வருவதால், தற்போது இதன் டிமாண்டும் அதிகரித்துவிட்டது” என்றவர்கள், இந்தக் கடத்தல் காரணமாக, திமிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் பற்றியும் விவரித்தார்கள்...

“உலக அளவில் ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதால், அவை அரிய வகைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இயற்கையாக கடலில் மிதக்கும் அம்பர்கிரிஸை மீனவர்கள் உள்ளிட்ட சில நெட்வொர்க் மூலமாக கடத்தல் மாஃபியாக்கள் பெற்றுவந்தன. ஆனால், இதன் தேவையும் டிமாண்டும் அதிகரித்ததால், செயற்கையாக அம்பர்கிரிஸை எடுக்கும் வேலைகள் அதிகரித்திருக்கின்றன. இதற்காக ஸ்பெர்ம் திமிங்கிலத்தை வேட்டையாடும் கும்பல், அதன் தாடை உள்ளிட்ட பகுதிகளைக் கிழித்து, கழிவுகளை எடுத்து, அதைப் பல்வேறு பிராசஸ்களில் செயற்கை அம்பர்கிரிஸாக மாற்றுகிறார்கள். ஆசியா முழுவதும் இந்த வேட்டை வேகமாகப் பரவிவரும் சூழலில், இப்போது தமிழகத்திலும் கேரளாவிலும் அம்பர்கிரிஸ் கும்பலின் நெட்வொர்க் நீண்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த சில கும்பல்கள் தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக அம்பர்கிரிஸை துபாய்க்குக் கடத்துவதாக தகவல்கள் வருகின்றன. அந்த நெட்வொர்க்கிலுள்ள சிலரை ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம்” என்றார்கள்.

தமிழகத்தில் அதிகரிக்கும் அம்பர்கிரிஸ் மாஃபியா!

எதற்கு இந்த அம்பர்கிரிஸ்?

‘நாள் முழுவதும் வாசனை’ என்றெல்லாம் உயர்ரக வாசனைத் திரவியங்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன அல்லவா... அதன் சூட்சுமம்தான் இந்த அம்பர்கிரிஸ் என்கிறார்கள். நறுமண திரவியங்கள் தயாரிப்பில் இவை பெரும் பங்குவகிக்கின்றன. இது அதிகாரபூர்வ தகவல். ஆனால், ஆண்மை சக்தியை அதிகரிக்கும்; பாலுணர்வைத் தூண்டும் என்றெல்லாம் உலகம் முழுவதும் உலவும் வதந்திகளாலும் இதன் மதிப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் வி.வி.ஐ.பி-க்கள் அம்பர்கிரிஸை சூடம்போல எரித்து, புகையை நுகர்கிறார்கள். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் கொட்டவும் தயாராக இருக்கிறார்கள்.

வனத்துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism