Published:Updated:

ரூ.23 கோடி மதிப்புள்ள ’அம்பர்கிரிஸ்’ - இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் சிக்கியது எப்படி?

அம்பர்கிரிஸ்
அம்பர்கிரிஸ்

தூத்துக்குடியில் இருந்தது இலங்கைக்கு கடத்த முயன்ற, ரூ.23 கோடி மதிப்புடைய 23 கிலோ ’அம்பர்கிரிஸ்’-ஐ மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் ’பீடி இலை’, ‘கஞ்சா’, ‘மஞ்சள்’ உள்ளிட்டவை அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இது போன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், குழுவினர், தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அலுவலகம்
தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அலுவலகம்

அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். காரில், திமிங்கலத்தின் வாயிலிருந்து உமிழக்கூடிய ‘அம்பர்கிரிஸ்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய அரிய வகை ஆம்பர்கிரிஸ்-ஐ இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன் எடை 23 கிலோ இருப்பதாகவும், இதன் சர்வதேச மதிப்பு ரூ23 கோடி எனவும் அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து காரில் இருந்த 23 கிலோ அம்பர்கிரிஸை பறிமுதல் செய்ததுடன் காரில் கடத்தி வந்த நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன், நெல்லை மாவட்டம் தருவையைச் சேர்ந்த பிரபாகரன், தூத்துக்குடியைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். முதல்கட்ட விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அம்பர்கிரிஸ் எங்கிருந்து கிடைத்தது? அவர்களின் கடத்தல் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ’அம்பர்கிரிஸ்’ குறித்து மீன்வள ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் பேசினோம், “ ‘ஸ்பெர்ம்’ என்ற எண்ணெய்த் திமிங்கலத்தின் ‘உமிழ்நீர்’ அல்லது ‘வாந்தி’ எனப்படும் ஒருவிதக் கழிவுப்பொருள்தான் ’அம்பர்கிரிஸ்’. இந்த ஸ்பெர்ம் திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்தது உருவாகுவதாகச் சொல்லப்படுகிறது. திமிங்கலம் தன் இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது.

ரூ.23 கோடி மதிப்புள்ள  ’அம்பர்கிரிஸ்’ - இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் சிக்கியது எப்படி?

கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்களை இரையாக விழுங்கும்போது அவற்றின் கூர்மையான உறுப்புகள், முட்கள் போன்றவை திமிங்கலத்தின் செரிமான உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தும். அதைத்தடுப்பதற்காக, திமிங்கலம் ’அம்பர்கிரிஸ்’-ஐத் தற்காப்பு கவசமாகப் பயன்படுத்துகிறது. தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. அந்தக் கழிவுகள், அம்பர்கிரிஸ்ஸாக கடலில் மிதக்கின்றன. இவை, சூரியஒளி பட்டு கட்டியாகவும், கடல் நீரால் கறுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களுக்கு மாறுகின்றன. கடல் அலைகளால் அடித்து வரப்பாட்டு கடற்கரை ஓரத்திலும், சில நேரங்களில் மீனவர்களின் மீன்பிடி வலைகளிலும் சிக்குகின்றன” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பர்கிரிஸுக்கு ஏன் இந்த மதிப்பு என அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், “இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் எண்ணெய் திமிங்கலங்கள், பாதுகாக்கபட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. இந்த ’அம்பர்கிரிஸ்’-ஐ உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காகவும், விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பில்கூட பயன்படுத்தப்படுகிறதாம். வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்தும் அரபு நாடுகளில் அம்பர்கிரிஸுக்கு தனி வரவேற்பும் உள்ளதாம். ஒரு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி முதல் ஒன்றரை கோடியாம்.

ரூ.23 கோடி மதிப்புள்ள  ’அம்பர்கிரிஸ்’ - இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் சிக்கியது எப்படி?

தங்கத்தைவிட இதன் மதிப்பு பல மடங்காகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இதை ’கடல் தங்கம்’, ‘மிதக்கும் தங்கம்’ என்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கடத்தலை முடிந்தவரை தடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றனர். இதேபோல, கடந்த ஜூன் 21-ம் தேதி, திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் 2 கிலோ எடையுடைய, ரூ.2 கோடி மதிப்புடைய அம்பர்கிரிஸை விற்பனை செய்ய முயன்ற 6 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழக கடலோர மாவட்டங்களில்தான் இவை கடத்த முயல்வதும், பறிமுதல் செய்யப்படுவதும் நிகழ்கின்றன.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு