Published:Updated:

`பெங்களூரு சிறுமியை மீட்ட போலீஸார்!’ -ஆம்பூருக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க பெண் பிரமுகர்

கைது செய்யப்பட்ட பிரேமா
கைது செய்யப்பட்ட பிரேமா

ஆம்பூரில், வாடகைக்கு வீடு எடுத்து இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் தொழில் நடத்திவந்த அ.தி.மு.க பெண் பிரமுகர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சிலர், பாலியல் தொழில் செய்வதாகக் காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100-க்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சம்பந்தப்பட்ட அந்த வீட்டைச் சோதனை செய்தபோது, 17 வயதுடைய ஒரு சிறுமியும் இரண்டு பெண்களும் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள்

விசாரணையில், உமராபாத் வேப்பமரத் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான பிரேமா (50), பெங்களூருவைச் சேர்ந்த லதா (35) மற்றும் லதாவின் மகள் ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸார் அவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டபோது, 3 பேரும் மாறிமாறி சண்டை போட்டுக் கொண்டு வர மறுத்தனர். பின்னர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். பெண் போலீஸார் மூலம் அந்த 3 பெண்களும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அ.தி.மு.க பிரமுகரான பிரேமா, பாலியல் தொழில் நடத்தும் தரகர் எனத்தெரியவந்தது.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், ‘‘ கடலூர் மாவட்டம், வடலூர் கிராமத்தில் கணவருடன் வசித்துவந்த பிரேமா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உமராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து செட்டிலாகிவிட்டார். அ.தி.மு.க-வில் சேர்ந்து மாவட்டப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்துவந்த அவர் தற்போது உமராபாத் அருகே உள்ள கைலாசகிரி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் பதவி வகிப்பதாகக் கூறப்படுகிறது.

`இரும்புக் கம்பி சித்ரவதை; 2-வது திருமணம்?!’- கேரளப் பெண்ணின் புகாரால் சிக்கிய குமரி அதிமுக பிரமுகர்

இரண்டு ஆண்டுகளுக்குமுன் பாலியல் தொழில் செய்யும் சில நபர்களுடன் பிரேமாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளாக இத்தொழிலை நடத்திவந்துள்ளார். பாலியல் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள சில பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுடைய பெண் குழந்தைகளையும் இந்தக் கொடுமையில் தள்ளியிருக்கிறார்.

இதற்காக, நாளொன்று ரூ.4,000 சம்பளமாக வழங்கியுள்ளார். இளம்பெண்களை மூளைச்சலவைச் செய்து பாலியல் தொழிலுக்கு அழைத்துவருவதற்காக மேலும் இரண்டு பெண்கள் பிரேமாவுக்கு உதவி செய்துள்ளனர். அவர்களையும் தீவிரமாகத் தேடிவருகிறோம். பிடிபட்ட 3 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுமி என்பதால் அவரை மட்டும் திருப்பத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டோம். அ.தி.மு.க பிரமுகர் பிரேமா, சிறுமியின் தாய் லதா ஆகிய 2 பேரையும் விபசார வழக்கில் கைதுசெய்து வேலூர் மத்தியப் பெண்கள் சிறையில் அடைத்துள்ளோம்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் பாலியல் தொழில் செய்யும் சில நபர்களுடன் பிரேமாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளாக இத்தொழிலை நடத்திவந்துள்ளார்.
வேலூர் போலீஸார்

இதில், வேறு பிரமுகர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா எனத் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

இதனிடையே, பிரேமாவின் செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் அதை ஆய்வுசெய்தபோது, கடைசியாக அவருடன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி ஒருவர் பேசியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. `அவர் ஏன் பேசினார்?' என்பதுபற்றிய தகவலைச் சிறிதளவும் கசிய விடாமல் தடுப்பதற்கான வேலைகளும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு