Published:Updated:

``அவளிடமே செல்கிறேன்!’’ - மனைவி இறந்த துக்கத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்

ராஜேஷ்
ராஜேஷ்

மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ஆம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). ஷூ கம்பெனித் தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா கடந்த 6-ம் தேதி தூக்குமாட்டிய நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கணவனுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக சசிகலா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

சசிகலா
சசிகலா

இந்நிலையில், மனைவியின் நிரந்தரமான பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத ராஜேஷ், ``மனைவியின் சாவுக்கு நான் காரணமாகிவிட்டேன். அவளிடம் செல்கிறேன்’’ என்று நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். நேற்று இரவு கென்னடிகுப்பம் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருக்கிறார் ராஜேஷ். அந்த நேரத்தில் வந்த ஏதோவொரு ரயில் மோதியதில், அவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தண்டவாளம் வழியாகச் சென்ற அந்தப் பகுதி மக்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். உடல் பாகங்களில் முகப்பகுதி மட்டும் துண்டாகிக் கிடந்தது.

ராஜேஷ்
ராஜேஷ்

அதைவைத்து ராஜேஷின் உடலை உறவினர்கள் மூலமாக போலீஸார் அடையாளம் கண்டனர். பின்னர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு