Published:Updated:

`ஒரு மாசத்துக்கு முன்னாடியே தப்பிச்சிட்டார்!’ - அ.ம.மு.க பிரமுகர் கொலையில் அதிரவைத்த மனைவி

``நடத்தையில் சந்தேகப்பட்டு சித்திரவதை செய்தார். அம்மா கொடுத்த ஐடியாவால், கணவரின் கதையை முடித்துவிட்டேன்’’ என்று அ.ம.மு.க பிரமுகர் கொலையில் அதிரவைத்திருக்கிறார் அவரின் மனைவி.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (43). அ.ம.மு.க பிரமுகரான இவர், எலெக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரராகவும் தொழில் செய்துவந்தார். ரமேஷ்பாபுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 10 வயதில் ஓர் மகளும், 6 வயதில் ஓர் மகனும் உள்ளனர். ஜெயந்தி ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் என்று கூறப்படுகிறது. வேறு சமூகத்தைச் சேர்ந்த அவரை ரமேஷ்பாபு காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் சொல்கிறார்கள். ஜெயந்தி அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவந்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி பாலாற்றுக்குச் செல்லும் சாலையிலுள்ள கழிவுநீர் கால்வாயின் தரைப்பாலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரமேஷ்பாபு சடலமாகக் கிடந்தார்.

ரமேஷ்பாபு
ரமேஷ்பாபு

ஆம்பூர் தாலுகா போலீஸார் உடலை மீட்டு தீவிர விசாரணையில் இறங்கினர். எஸ்.பி விஜயகுமார் உத்தரவின்பேரில், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ரமேஷ்பாபு கொலையில் அவருடைய மனைவி ஜெயந்திமீது சந்தேகம் எழுந்தது. விசாரணை வளையத்துக்குள் அவரைக் கொண்டுவந்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது தாயின் திட்டமிடலின்படி உறவினர்களை ஏவி கணவரைக் கொன்றதாக திடுக்கிட வைத்தார் ஜெயந்தி.

அவர் கொடுத்த வாக்குமூலத்தில்,``என்னுடைய நடத்தையில் என் கணவருக்கு சந்தேகம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்துத் துன்புறுத்தினார். இது குறித்து என்னுடைய அம்மா சரஸ்வதியிடம் கூறி அழுதேன். அவரும் மருமகனுக்கு புத்திமதி சொன்னார்.

சென்னை: மது அருந்திய கணவன், மனைவி - நள்ளிரவில் நடுரோட்டில் நடந்த கொலை!

தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால், ஒரு மாதத்துக்கு முன்னரே அவரைக் கொலை செய்ய அம்மா திட்டம் போட்டுக்கொடுத்தார். அவர்மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றோம். அப்போது, அவர் காயத்துடன் தப்பிவிட்டார். கடந்த மாதம் 27-ம் தேதி இரவு, பாலாற்றுப் பகுதிக்கு வரவழைத்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டோம். அன்று இரவு என்னுடைய உறவினர்கள் சிலர் கணவரை அழைத்துச் சென்று மது குடிக்கவைத்தனர். போதை தலைக்கு ஏறியவுடன், இரும்புக்கம்பியால் அவரை அடித்துக் கொன்றனர். பின்னர், சடலத்தை தூக்கி கால்வாயில் போட்டுவிட்டு விபத்து மாதிரி தெரிய அதன்மேல் ஸ்கூட்டரையும் தள்ளிவிட்டனர்’’ என்று ஜெயந்தி கூறியதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

ரமேஷ்பாபு - அவருடைய மனைவி ஜெயந்தி
ரமேஷ்பாபு - அவருடைய மனைவி ஜெயந்தி

இதையடுத்து, ஜெயந்தியைக் கைதுசெய்த போலீஸார் அவருடைய தாய் சரஸ்வதியையும் பிடித்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும், ரமேஷ்பாபுவின் கொலையில் தொடர்புடைய ஆம்பூர் அருகேயுள்ள மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த கௌதம் மற்றும் ராமன், வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்ராஜ், செதுவாலையைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்துள்ள போலீஸார், ரமேஷ்பாபுவின் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு