Election bannerElection banner
Published:Updated:

சென்னை: அம்மா உணவகத்தைச் சூறையாடிய தி.மு.க-வினர்! - அ.தி.மு.க-வினர் சாலைமறியல்

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

அம்மா உணவகத்துக்குள் நுழைந்த தி.மு.க-வினர் ஜெயலலிதா படத்தை அகற்றிவிட்டு, கருணாநிதியின் படத்தைவைக்க வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதி, 10-வது பிளாக்கில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தில் ஊழியர்கள் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த `அம்மா உணவகம்’ என்ற பெயர்ப்பலகையை அகற்றினர். பின்னர் உள்ளே சென்ற சிலர் அம்மா உணவகத்தின் போர்டுகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தனர். அதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கீழே விழுந்து கிடக்கும் ஜெயலலிதா படம்
கீழே விழுந்து கிடக்கும் ஜெயலலிதா படம்

அம்மா உணவகம் என்ற பெயரை அகற்றிய பிறகு ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் அங்கிருந்து எடுத்தனர். அதன் பிறகு அந்த இடத்தில் ஸ்டாலின் படத்தை வைக்க முயன்றனர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட அ.தி.மு.க-வினர் அம்மா உணவகம் முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டாலினின் படத்தை வைக்க ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் தி.மு.க-வினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம்: வெளுத்து வாங்கும் மழை..! - மூடப்பட்ட அம்மா உணவகம்... வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

இதற்கிடையில் தி.மு.க-வினரின் செயலைக் கண்டித்து அ.தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அ.தி.மு.க-வினர் சாலைமறியலைக் கைவிட்டனர். அதன்பிறகு மீண்டும் உணவகத்தில் `அம்மா உணவகம்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் தி.மு.க-வினர் அம்மா உணவகத்தைச் சூறையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சாலைமறியல்
சாலைமறியல்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அம்மா உணவகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதுவரை புகார் வரவில்லை. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தால் அம்மா உணவகத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ``ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே தி.மு.க-வினர் அராஜகத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்களுக்காக ஜெயலலிதா, அம்மா உணவகத்தை தொடங்கினார். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்துவருகிறது. ஏராளமானவர்கள் பயனடைந்துவருகின்றனர். மக்கள் சாப்பிடுகிற இந்த இடத்தில் தி.மு.க-வினர் அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அம்மா உணவகத்திலுள்ள பொருள்கள், உணவை சேதப்படுத்தியிருக்கின்றனர். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றனர்.

இதற்கிடையே அந்தப் பகுதி திமுக நிர்வாகிகள் தலைமையில் கிழிக்கப்பட்ட பேனர்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு திமுக உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவறு செய்த இருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.

இது குறித்து அந்தப் பகுதி தி.மு.க தரப்பைத் தொடர்புகொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.

முகபேர் உணவகத்தை தி.மு.க-வினர் சூறையாடிய சம்பவத்தில் எல்லம்மாள் என்பவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதில், அம்மா உணவகத்துக்குள் தி.மு.க-வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் உட்பட சிலர் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை உடைத்தனர். உணவகத்தின் பெயர்ப் பலகையை உடைத்தெறிந்தனர். மதிய உணவையும், பொருள்களையும் சேதப்படுத்தினர். பெண் ஊழியர்களை அடிக்க வந்ததோடு அவதூறாகவும் பேசினர்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கடந்த 6-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினுக்கும் தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நவசுந்தருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது பெஞ்சமினும் நவசுந்தரும் மாறி மாறி புகாரளித்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையிலுள்ள சூழலில்தான் அம்மா உணவகம் சூறையாடப்பட்ட புகாரில் நவசுந்தர் மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு