Published:Updated:

`பொய் சொன்னேன், கணவர் கொலை செய்துவிட்டார்'- ரவுடி கொலையில் சிக்கிய அம்மு வாக்குமூலம்!

ரவுடி கொலை வழக்கில் கைதான அம்மு என்கிற கார்த்திகா
ரவுடி கொலை வழக்கில் கைதான அம்மு என்கிற கார்த்திகா

`இட்லிக் கடைக்கு வந்த ரவுடி க்ரைம் சுரேஷ், என் கையைப்பிடித்து இழுத்ததாக என் கணவரிடம் பொய் சொன்னேன்' என்று அம்மு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பாடி, முனீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலா. இவரின் மகன் சுரேஷ் என்கிற க்ரைம் சுரேஷ் (31). இவர் கடந்த 14-ம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் விசாரணை நடத்தினார். சுரேஷ் கொலை வழக்கில் ஜெயக்கொடி, அவரின் மனைவி அம்மு என்கிற கார்த்திகா மற்றும் ஜெயக்கொடியின் நண்பர்கள் ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மணிகண்டனை போலீஸார் தேடிவருகின்றனர்.

க்ரைம் சுரேஷ்
க்ரைம் சுரேஷ்

கைதான அம்மு என்கிற கார்த்திகா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``நான் அம்பத்தூர் பாடி, கலைவாணர் நகர் பகுதியில் கணவர் ஜெயக்கொடி, 2 மகன்களுடன் குடியிருந்துவருகிறேன். என் கணவர் தி.நகரில் உள்ள பிரபலமான கடையில் ப்ளோர் மேலாளராக பணியாற்றிவந்தார். பெரும்பாலும் கடையிலேயே தங்கிவிடுவார்.

வீட்டில் நானும் என் மகன்களும் மட்டுமே தனியாக இருந்தோம். இட்லி கடையின் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. அங்கு ஆட்டோ ஓட்டிவந்த சுரேஷ் என்பவர் என் கடைக்கு இட்லி சாப்பிட அடிக்கடி வருவார். என் குடும்ப சூழலைத் தெரிந்துகொண்ட அவர் எனக்கு உதவி செய்தார். இதனால் சுரேஷும் நானும் பழகினோம். எங்கள் இருவரின் நட்பு வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்தது. இதனால் அவர்கள் என்னைக் கண்டித்தனர். அதன்பிறகு சுரேஷிடம் பேசுவதை நிறுத்தினேன். ஆனால், அவர் என்னிடம் பேச பலவகையில் முயற்சி செய்தார்.

ஜெயக்கொடி
ஜெயக்கொடி

கடந்த 14-ம் தேதி இட்லி கடைக்கு சுரேஷ் வந்தார். அப்போது ஏன் என்னிடம் பேசுவதில்லை என்று கேட்டார். அவரிடம் என் நிலைமையை எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென கத்தியை எடுத்து என்னைக் குத்தினார். வலியால் சத்தம் போட்டேன். அப்போது அங்கு வந்த என் கணவர் ஜெயக்கொடியிடம் சுரேஷ் என் கையைப் பிடித்து இழுத்துவிட்டார் என்று பொய் சொன்னேன். உடனே கட்டையை எடுத்து சுரேஷை ஜெயக்கொடி அடித்தார். இதில் அவர் மயங்கிவிட்டார்.

உடனே ஜெயக்கொடி அவருடைய நண்பர்கள் ராஜா, சுந்தரகாண்டனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மூன்று பேரும் சேர்ந்து சுரேஷை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக என்னிடம் கூறினர். ஆனால், நடுவழியில்தான் அவரைக் கொலை செய்துள்ளனர். வீட்டுக்கு வந்த ஜெயக்கொடி, சுரேஷைக் கொலை செய்துவிட்டதாகவும் வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறினார். அதன்படி நானும் அமைதியாக இருந்தேன். ஆனால், சுரேஷ் ஓட்டிவந்த ஆட்டோ வீட்டின் அருகில் நின்றது. மேலும், அவரும் நானும் போனில் பேசிய அழைப்புகள் ஆகியவற்றால் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

raja
raja

ரவுடி க்ரைம் சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஜெயக்கொடியும் கார்த்திகாவும் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களின் இரண்டு மகன்களும் ஆதரவின்றி தவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு