உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் வசிப்பவர் மவுரியா (81). பெயின்ட்டரான மவுரியா அடிக்கடி தன் நண்பர் வீட்டுக்குச் சென்றுவருவது வழக்கம். அங்கு 17 வயது பெண் ஒருவர் வளர்ந்துவந்தார். அந்தப் பெண்ணிடம் மவுரியா தவறாக நடந்துகொண்டிருக்கிறார். முதியவரான மவுரியா இளம்பெண்ணை நேரடியாகப் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. ஆனால், தன் கை, கால் விரல்களைக்கொண்டு அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அச்சம் காரணமாக அந்தப் பெண் இது குறித்து வெளியில் சொல்லவில்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மவுரியா, கடந்த ஏழு ஆண்டுகளாக அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இது குறித்து புகார் செய்ய முடிவுசெய்த அந்தப் பெண், அதற்கான ஆதாரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அந்த முதியவர் செய்யும் காரியங்களை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். அதைக்கொண்டு முதியவர் குறித்து தனது பாதுகாவலரிடம் புகார் செய்தார். அவரும் இது குறித்து போலீஸில் புகார் செய்யலாம் என்று தெரிவித்தார். எனவே, இருவரும் சேர்ந்து ஆதாரங்களுடன் சென்று போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் `டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கு பதிவுசெய்து, முதியவர் மவுரியாவைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், ``குற்றவாளிமீது சட்டப்பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 323, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது பாதுகாவலர் வீட்டில் தங்கியிருந்தார். பாதுகாவலரின் நண்பர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை
கடந்த 2012-ம் ஆண்டுவரை, டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பாலியல் குற்றமாகவே கருதப்படாது. ஆனால், டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் குற்றமாக அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு டிஜிட்டல் பாலியல் வன்கொடுமையும் 376-வது சட்டப் பிரிவின்கீழ் வழக்காக பதிவுசெய்யப்படத் தொடங்கியது. ஆனால், இத்தகைய வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றன.