Published:Updated:

ஸ்கார்பியோ கார்... சிக்கிய முக்கியப் புள்ளி..!- என்ன நடக்கிறது நெல்லை முன்னாள் மேயர் படுகொலையில்?

பி.ஆண்டனிராஜ்

நெல்லை முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள். கொலைக்குத் துணையாக இருந்த மேலும் மூவரைக் கைதுசெய்ய காவல்துறை தீவிரம்காட்டிவருகிறார்கள்.

முன்னாள் மேயர்
முன்னாள் மேயர்

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவரையும் 23-ம் தேதி மதியம், மர்மக் கும்பல் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தொடக்கத்தில், ஆதாயக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

சிசிடிவி-யில் சிக்கிய கொலையாளிகள்
சிசிடிவி-யில் சிக்கிய கொலையாளிகள்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. அதனால், மதுரையில் தனது மகள் வீட்டில் தங்கியிருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த சீனியம்மாளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அவர், தேர்தலுக்காக உமாமகேஸ்வரியிடம் பணம் எதுவும் கொடுத்தாரா என்பது பற்றி விசாரித்தார்கள். அதில் எந்தத் தகவலும் கிடைக்காததால், நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில், சந்தேகத்திற்கிடமான வகையில் வெள்ளை ஸ்கார்பியோ கார் ஒன்று வந்துசெல்வதைக் கண்டுபிடித்தார்கள். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பந்தம் இல்லாத எண்களைத் தவிர்த்த போலீஸார், குறிப்பிட்ட சில எண்கள் மட்டும் நீண்ட நேரம் பேசியதைக் கண்டுபிடித்தனர். அந்த எண்களில், குறிப்பிட்ட ஒரு எண் சந்தேகத்துக்குரியதாக இருந்தது தெரியவந்தது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

அதனால், அந்த நபர் யார் எனப் பார்த்தபோது, அது தி.மு.க பெண் பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. ஏற்கெனவே, பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய கார்த்திகேயனைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கூலிப்படையுடன் அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலை நடந்த வீட்டின் அருகே 4 பேருடன் அவர் பேசிக் கொண்டிருப்பதற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கார்த்திகேயனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்டவர்களில் சிலர், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், கொலையாளிகள்குறித்து பிடிபட்ட கார்த்திகேயன் தெரிவிக்க மறுப்பதால், தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இதனிடையே, கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகளை செங்குளம் பகுதியில் கொலையாளிகள் வீசிவிட்டுச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது. அதனால் அந்த கத்திகளைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

கொலையாளி பயன்படுத்திய கார்
கொலையாளி பயன்படுத்திய கார்

சங்கரன்கோவில் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட, தனது தாய் சீனியம்மாளுக்காக இரு தவணைகளாக 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தும் சீட் வாங்கிக் கொடுக்காத ஆத்திரத்தில் இந்தக் கொலையில் கார்த்திகேயன் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் கார்த்திகேயனை காவல்துறையில் இதுவரை கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.