Election bannerElection banner
Published:Updated:

திண்டுக்கல்: `உங்க தோட்டத்தில தங்கப்புதையல் இருக்கு’ - ரூ.22 லட்சம், 45 பவுன் நகை சுருட்டிய ஜோதிடர்

பூஜைக்காக கொண்டு வந்த புதையல் மாதிரி
பூஜைக்காக கொண்டு வந்த புதையல் மாதிரி

தோட்டத்தில் புதையல் இருப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, விவசாயி ஒருவரிடம் இருந்து ரூ.22 லட்சம் மற்றும் 45 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்ட ஜோதிடரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அரிய புத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 51). விவசாயத்தை தொழிலாகக் கொண்ட தங்கவேல், குடும்ப பிரச்னை காரணமாக, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் கிராமத்தில் வசிக்கும் சசிகுமார் என்ற ஜோதிடரிடம், தனது ஜாதகத்தை எடுத்துச் சென்று காண்பித்துள்ளார். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சசிகுமார், ‘’உங்க தோட்டத்தில் பெரிய தங்கப் புதையல் இருக்கு… அதை நான் எடுத்துத் தருகிறேன்…’’ என கூறியுள்ளார். சசிகுமாரின் ஆசை வார்த்தையை நம்பிய தங்கவேல், அவரை வேடசந்தூர் அழைத்துவந்துள்ளார்.

புதையல் எடுக்க நடத்தப்பட்ட பூஜை
புதையல் எடுக்க நடத்தப்பட்ட பூஜை
`சந்தேக நபரைப் புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

அரியபுத்தம்பட்டியில் உள்ள தங்கவேலின் வீட்டிற்கு வந்த ஜோதிடர் சசிகுமார், பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பணம் பெற்றுள்ளார். தொடர்ந்து, பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி, தங்கவேலிடம் இருந்து சிறிது சிறிதாக அவ்வப்போது பணம் மற்றும் நகைகளைப் பெற்றுள்ளார். மொத்தமாக ரூ.22 லட்சம் மற்றும் 45 பவுன் தங்க நகைகளை சசிகுமார் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இறுதி பூஜை செய்ய வேண்டும் எனக் கூறிய சசிகுமார், தனக்கு கார், புல்லட் பைக், செல்போன் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போதும், சசிகுமாரை நம்பிய தங்கவேல், அவற்றை வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், தங்கப் புதையலை கடைசிவரை சசிகுமார் எடுக்காமல் இருக்க, சந்தேகமடைந்த தங்கவேல், தன்னிடம் இருந்து வாங்கிய பணம், நகை மற்றும் பொருள்களை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டுள்ளார். செல்போன், பைக், கார் ஆகியவற்றை திருப்பிக் கொடுத்த சசிகுமார், பணம் மற்றும் நகைகளை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஜோதிடர் சசிகுமார்
கைது செய்யப்பட்ட ஜோதிடர் சசிகுமார்

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிடம் புகார் கொடுத்தார் தங்கவேல். அப்புகார், மாவட்டக் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் பானுமதி ஆகியோர் விசாரணை செய்து, திருப்பூரைச் சேந்த ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, சசிகுமார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தோட்டத்தில் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறி, விவசாயி ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

திண்டுக்கல்: `தேன்மொழி என்றாலே தி.மு.க-வுக்கு பயம்!’ - நத்தம் விஸ்வநாதன் கிண்டல்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு