Published:Updated:

சீனியர் அதிகாரிக்குச் துப்பாக்கிச்சூடு; ஆள்வைத்து கொலை செய்ய முயன்ற ஜூனியர்கள்; அதிர்ச்சிப் பின்னணி

மும்பையில் உயரதிகாரியை ஆள்வைத்துக் கொலை செய்ய முயன்ற ஜூனியர் அதிகாரிகள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையையொட்டி இருக்கும் மீரா பயந்தர் மாநகராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா மொஹிதே, யஷ்வந்த்ராவ் தேஷ்முக் ஆகியோர் ஜூனியர் இன்ஜினீயர்களாக வேலை செய்துவந்தனர். இந்த மாநகராட்சியில் தீபக் என்பவர் சீனியர் இன்ஜினீயராக இருக்கிறார். கிருஷ்ணாவும் தேஷ்முக்கும் 2000-ம் ஆண்டிலிருந்து வேலை செய்துவருகின்றனர். நீண்ட நாள்களாகப் பதவி உயர்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது பதவி உயர்வுக்கு தீபக் தடையாக இருப்பதாகக் கருதினர். தீபக் பதவி உயர்வு வழங்கும் கமிட்டியில் இருந்தார். மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்காத காரணத்தால், தீபக்கைக் கொலை செய்தால் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்தனர்.

கிருஷ்ணா, சின்ஹா, ராஜு
கிருஷ்ணா, சின்ஹா, ராஜு

இதற்காக ராஜு விஷ்வகர்மா என்பவரிடம் தீபக்கைக் கொலை செய்யும் பொறுப்பை கிருஷ்ணாவும் தேஷ்முக்கும் ஒப்படைத்தனர். ராஜுவுக்கு சோட்டாராஜனின் முன்னாள் கூட்டாளி அமித் சின்ஹா என்பவரின் தொடர்பு இருந்தது. இந்தக் கொலைக்காக மொத்தம் ரூ.20 லட்சம் விலை பேசி, 10 லட்சத்தை கிருஷ்ணா, ராஜுவிடம் கொடுத்தார். ராஜு இந்தக் கொலைக்காக அமித் என்பவரையும், துப்பாக்கி சுடுபவரான அஜய் சிங் என்பவரையும் நியமித்தார். கடந்த மாதம் 29-ம் தேதி இன்ஜினீயர் தீபக், போரிவலியிலுள்ள தனது வீட்டுக்கு மாநகராட்சியின் காரில் சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தீபக்கை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர்.

திருவாரூர்: துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை! - கொள்ளையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

இதில் கார் கண்ணாடி உடைந்து தீபக் முகத்தில் பட்டது. மற்றப்படி அவர் காயத்துடன் உயிர் தப்பினார். இந்தக் கொலை முயற்சி தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் ஹேமந்த் கூறுகையில், ``இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் அமித் சின்ஹாவை உத்தரப்பிரதேசத்திலிருந்து பிடித்து வந்து விசாரித்தோம். அவரிடம் விசாரணை நடத்தி ராஜு விஷ்வகர்மா, அவரது மேலாளர் பிரதீப் ஆகியோரையும் கைது செய்தோம். இறுதியில் இந்தக் கொலை முயற்சிக்குப் பணம் கொடுத்த மாநகராட்சி இன்ஜினீயர்கள் கிருஷ்ணா, தேஷ்முக் இருவரையும் கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பதவி உயர்வு கொடுக்காமல் தீபக் இழுத்தடித்ததால், கோபத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாகத் தெரியவந்திருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு