Published:Updated:

`போலீஸ் விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!'- அம்பத்தூர் ஏரிப்பகுதியில் நடந்தது என்ன?

செல்போனைப் பிடுங்கிக்கொண்டதால் விபரீத முடிவு!
News
செல்போனைப் பிடுங்கிக்கொண்டதால் விபரீத முடிவு!

ஏரியின் அவலநிலை குறித்து அந்தப் பகுதிவாசிகள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, திருமுல்லைவாயல் போலீஸார் எரிப் பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் அம்பத்தூர் ஏரி அமைந்திருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சீரமைக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்துவந்த இந்த ஏரியை, தற்போது பொதுப்பணித்துறையினர் தூர்வாரி, பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதைகள் அமைத்து புதுப்பித்திருக்கின்றனர். அதன் காரணமாக, ஏரியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்தப் பகுதிவாசிகள் அதிக அளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக அயப்பாக்கம் ஏரிக்குள் போதை ஆசாமிகள் சிலர் மது அருந்துவதும், கஞ்சா விற்பனை செய்வதும் என மீண்டும் ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவரும் பொதுமக்களை மிரட்டி அச்சத்தை ஏற்படுத்திவருகின்றனர். ஏரியின் அவலநிலை குறித்து அந்தப் பகுதிவாசிகள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, திருமுல்லைவாயல் போலீஸார் எரிப் பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

அம்பத்தூர் ஏரி
அம்பத்தூர் ஏரி

இந்தநிலையில், நேற்றைய தினம் திருமுல்லைவாயல் காவல் நிலைய தலைமை காவலர் சந்தோஷ் வழக்கம்போல் ஏரிப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அயப்பாக்கம், ஐயப்பன் நகர், ஓம்சக்தி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாக்யராஜ் (34) மற்றும் அவரது நண்பர் பிரதீப் (30) ஆகியோர் ஏரியின் புதர்ப் பகுதியில் அமர்ந்து மது அருந்திவிட்டு, கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏரிக்குள் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்களை தலைமைக் காவலர் சந்தோஷ் அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது, இளைஞர்கள் இயற்கை உபாதை கழிக்க வந்ததாக விளக்கமளித்திருக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் மது அருந்தியிருந்ததால் சந்தேகமடைந்த காவலர் சந்தோஷ் இருவரையும் நிற்கவைத்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, இருவர் குறித்தும் விவரங்கள் சேகரித்துவிட்டு திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது, பாக்யராஜ் காவலர் சந்தோஷிடம் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில், ஆத்திரமடைந்த காவலர் இருவரையும் மிரட்டி அடித்துவிட்டு அவர்களது செல்போன்களை வாங்கிக்கொண்டு, காவல் நிலையத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றிருக்கிறார். இருவரது செல்போன்களில் பாக்யராஜின் செல்போன் விலை உயர்ந்த ஐபோன் என்று கூறப்படுகிறது. இதில் வெறுப்பாகிப்போன பாக்யராஜ் காவலர் சந்தோஷிடம் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு அருகிலிருந்த காலி பீர் பாட்டிலை உடைத்து அதில் ஒரு துண்டை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டு, 'ஒழுங்கா எங்க போனை கொடுத்துடு..இல்லைன்னா நான் இந்த பீர் பாட்டில் கண்ணாடியிலேயே கழுத்த அறுத்துட்டு செத்துடுவேன்!' என்று தற்கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இளைஞர்கள் பாக்யராஜ் மற்றும் பிரதீப்
இளைஞர்கள் பாக்யராஜ் மற்றும் பிரதீப்

அப்போது காவலர் சந்தோஷ் பதிலுக்கு, "அப்படியா நீ சரியான ஆம்பளையா இருந்தா கழுத்த அறுத்துக்கோடா!" என்று அலட்சியமாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. காவலர் இவ்வாறு சொல்லி முடித்த மறுகணமே பாக்யராஜ் தன் கையிலிருந்த பாட்டில் துண்டால் கழுத்தை பலமாக அறுத்துக்கொண்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் சந்தோஷும் பாக்யராஜின் நண்பர் பிரதீப்பும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த பாக்யராஜை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் கழுத்துப் பகுதியில் ஆழமாகக் காயம் ஏற்பட்டிருப்பதால் உயர் சிகிச்சைக்கு மாற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு அவர்களால் முடிந்த முதலுதவியை மேற்கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், உயர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் வழியிலேயே பாக்யராஜ் உயிரிழந்துவிட்டார். அதையடுத்து, காவலர் சந்தோஷ், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாக்யராஜின் உடலை ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பியிருக்கிறார். போலீஸ் விசாரணையின்போது பொது இடத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தீயாகப் பரவிப் பரபரப்பைக் கூட்டியதை அடுத்து, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஷ் உத்தரவின்பேரில் ஆவடி துணை ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஆனந்த், காவலர் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திவருகிறார்.

திருமுல்லைவாயல் காவல் நிலையம்
திருமுல்லைவாயல் காவல் நிலையம்

இந்தநிலையில், தற்போது இளைஞர் தற்கொலை விவகாரம் குறித்து அறிந்த சென்னை மேற்கு மண்டல சட்டம், ஒழுங்கு இணை ஆணையர் ராஜேஸ்வரி, தலைமைக் காவலர் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

உயிரிழந்த பாக்யராஜுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாக்யராஜின் குடும்பத்தினர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று தற்கொலைக்குக் காரணமான காவலர் சந்தோஷைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். பின்னர், காவல் ஆய்வாளர் ஆனந்த் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீஸாரிடம் பேசினோம். "அயப்பாக்கம் ஏரியில் சமூக விரோதச் செயல்கள் அதிக அளவில் நடைபெற்றுவருவதாக எங்களுக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தவண்ணமாக இருக்கின்றன. அதனால்தான், அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறோம். நேற்றுக்கூட அந்த இரண்டு இளைஞர்களும் ஏரிப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு சந்தோஷ் அவர்களை விசாரித்திருக்கிறார். அவர்கள் கஞ்சா போதையில் வேறு இருந்திருக்கின்றனர். அதனால் சந்தேகமடைந்த அவர் விசாரணைக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கிறார். அப்போது, அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாக்யராஜ் காவலர் தன்னுடைய செல்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்டதால் போதையில் பீர் பாட்டில் துண்டை எடுத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ்
ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ்

அப்போதும் சந்தோஷ் அவரது மொபைல்போனை தராததால் யாரும் எதிர்பார்க்காதவிதமாகக் கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் இளைஞர்கள் இயற்கை உபாதை கழிக்கச் சென்றதாகவும், அவர்களை அடித்து, மிரட்டி காவலர் அவருடைய ஐபோனை பறித்துக்கொண்டதாகவும் சிலர் நடந்ததை திரித்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. எனவே, இதை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் செய்ய முயல்கிறார்கள்" என்றனர்.