Published:Updated:

`எந்தத் தப்பும் செய்யல!' - வாக்கி டாக்கியில் உளறிய இன்ஜினீயர்; நள்ளிரவில் பதறிய போலீஸ் அதிகாரிகள்

எஸ்.மகேஷ்

மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது போதையிலிருந்த பொறியாளர் வாக்கிடாக்கியில் உளறிய சம்பவம் நள்ளிரவில் காவல்துறையினரை பதற்றமடைய வைத்தது.

police patrol
police patrol

சென்னையில் தினமும் வாகனச் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. நேற்று இரவுப் பணியையொட்டி ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் போலீஸார் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார் திருநகர், ஆற்காடு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த இரண்டு வாலிபர்களைப் போலீஸார் மடக்கினர். அவர்கள் இருவரும் மது அருந்தியிருந்தனர். இதனால் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.

`எந்தத் தப்பும் செய்யல!' - வாக்கி டாக்கியில் உளறிய இன்ஜினீயர்; நள்ளிரவில் பதறிய போலீஸ் அதிகாரிகள்
Representational image

குடிபோதையில் பைக்கை ஓட்டிவந்த வாலிபர் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு, இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தகவல் தெரிவித்தார். உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்த வாலிபர்களை ரோந்து வாகனமான ஜிப்ஸியில் ஏற்றினர். குடிபோதையில் இருந்ததற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்காக இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த வாகனத்தில் போலீஸார் பேசுவதற்கு வசதியாக வாக்கி டாக்கியில் மைக் அமைக்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், ஜிப்ஸியில் இருந்த மைக்கைக் கையில் எடுத்தார். இதை எந்தப் போலீஸாரும் கவனிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர், ` நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை. ஆனால், போலீஸார் எங்களைப் பிடித்து கேஸ் போடுவதற்காகக் கொண்டு செல்கிறார்கள்' என்று உளறினார். நள்ளிரவில் போலீஸாரின் வாக்கி டாக்கியில் இப்படியொரு தகவலைக் கேட்டதும் நைட் டூயூட்டி காவலர் முதல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை பதற்றமடைந்தனர்.

Police walkie talkie
Police walkie talkie

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விருகம்பாக்கம் ரோந்து போலீஸாரிடம் என்ன நடக்கிறது என்று போலீஸ் உயரதிகாரிகள் வாக்கி டாக்கியிலேயே தகவல்களைக் கேட்டனர். அதற்கு குடிபோதையில் சிக்கிய வாலிபர்கள் குறித்த தகவலைத் தெரிவித்தனர் போலீஸார். அதன்பிறகே போலீஸார் நிம்மதியடைந்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதை வாலிபர்களை பரிசோதனை செய்துவிட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போதும் அவர்கள் போதையில் உளறியபடி இருந்தனர்.

போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த வருண், சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். ராயலா நகரில் உள்ள கிரி நகரில் வருண் தங்கியுள்ளார். அஜித், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர். இவர், வளசரவாக்கம், ஏழுமலை தெருவில் தங்கியுள்ளார். அஜித், தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று தெரியவந்தது. சம்பவத்தன்று பணி முடிந்த பிறகு மது அருந்திய இருவரும் வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் வந்துள்ளனர். அப்போதுதான் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

போலீஸ் ஜிப்ஸி
போலீஸ் ஜிப்ஸி

மேலும், ஜிப்ஸியில் வருண், அஜித் ஆகியோரை போலீஸார் அழைத்துச் சென்றபோது, வருண்தான் வாக்கிடாக்கி மைக்கில் பேசியுள்ளார். அவர் போதையில் உளறியதால் நள்ளிரவில் போலீஸார் பதற்றம் அடைந்துள்னர். இதையடுத்து தங்களின் பாணியில் வருண், அஜித்தை கவனித்த போலீஸார் இருவர் மீதும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது, ரகளை செய்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருவரையும் ஜாமீனில் வெளியில் விட்டுவிட்டனர்.

விருகம்பாக்கம் போலீஸாரிடம் பேசினோம். ``போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அபாரதத் தொகையும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. படித்தவர்கள்தாம் இந்தத் தவறுகளைச் செய்கின்றனர். பொறியாளர் வருண், வாக்கி டாக்கியின் மைக்கில் உளறிய சம்பவம் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. போதை தெளிந்த பிறகு இருவருக்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்துள்ளோம். குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக அபராதம் விதித்துள்ளோம்" என்றனர்.

Police vehilcles
Police vehilcles

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குடிபோதையில் பைக்கில் வந்த வருண், அஜித்தைப் பிடித்த இன்ஸ்பெக்டர், விருகம்பாக்கம் போலீஸாரிடம் இரவு 1.30 மணியளவில் ஒப்படைத்தார். இவர்கள் ஓட்டிவந்த பைக்கையும் போலீஸார் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனை முடிந்து காவல் நிலையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வருண், போதையில் வாக்கி டாக்கியில் பேசியுள்ளார். போதை தெளிந்த பிறகு, `தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கெஞ்சினார். இருப்பினும் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளோம்" என்றார்.