Published:Updated:

`பணம் இல்லை.. போ..!’- தென்காசியில் மது குடிக்கப் பணம் தர மறுத்த பாட்டிக்கு நேர்ந்த சோகம்

முதியோர் உதவித் தொகை மூலம் கிடைத்த பணத்தைப் பேரனுக்கு மது குடிக்கக் கொடுக்க மறுத்த மூதாட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மதுவுக்காக நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

கொலை செய்யப்பட்ட பாக்கியம் அம்மாள்
கொலை செய்யப்பட்ட பாக்கியம் அம்மாள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை அண்ணாமலைபுதூரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவரது மனைவி பாக்கியம் அம்மாள். 89 வயது நிரம்பிய மூதாட்டியான இவருக்கு போஸ், நாகராஜன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் போஸ்க்கு குழந்தைகள் கிடையாது. அதனால் பாக்கியம் அம்மாள் அவருடைய வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

` கொலை வழக்கை விசாரிக்க வந்தவர்!' - நெல்லை எஸ்.பி-யிடம் சிக்கிய போதை இன்ஸ்பெக்டர்

இளைய மகனான நாகராஜனுக்கு பாலமுருகன் என்ற மகன் உள்ளார். பாலமுருகனுக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவியும், நவீன் என்ற 5 வயது மகனும் உள்ளனர். அவர் மதுவுக்கு அடிமையானதால் சரிவர வேலைக்குச் செல்லாமல் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதனால் மனைவி தேன்மொழி குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

குடிக்கு அடிமையான பாலமுருகன் உறவினர்களிடம் பணத்தை வாங்கிக் குடித்து வந்துள்ளார். பெரியப்பா போஸ் வீட்டுக்குச் சென்று பாட்டி பாக்கியம் அம்மாளிடமும் அடிக்கடி பணம் வாங்கிச் சென்று குடித்திருக்கிறார். அவ்வப்போது பணம் கொடுக்கும் அவர், ஒரே பேரன் என்பதால் அறிவுறை கூறி திருத்துவதற்கு முயன்றுள்ளார்.

murder
murder

வழக்கம் போல பெரியப்பா வீட்டுக்குச் சென்ற பாலமுருகன், குடிப்பதற்காக பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் இல்லையென்று தர மறுத்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மது குடிக்கப் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த பாலமுருகன் அரிவாளை எடுத்து பாக்கியம் அம்மாளை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார். மது குடிக்கப் பணம் தர மறுத்த பாட்டியைப் பேரனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.