Published:Updated:

ராமநாதபுரம்: 2011-ல் நகைக்கடையில் கொள்ளை... 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைரேகையால் சிக்கிய திருடன்!

கைது செய்யப்பட்ட சேவுகராஜ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 11 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ராமநாதபுரம்: 2011-ல் நகைக்கடையில் கொள்ளை... 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைரேகையால் சிக்கிய திருடன்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 11 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
கைது செய்யப்பட்ட சேவுகராஜ்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆறு வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் எதுவும் திருட்டுப் போகவில்லை என்றாலும் கைரேகை நிபுணர்கள் தீவிரமாக கைரேகைகளை ஆய்வுசெய்தனர். இதையடுத்து, கடலாடி போலீஸார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்தியதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கமுதி அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சேவுகராஜ் (60) என்பது தெரியவந்து, அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

கடந்த 2011-ம் ஆண்டு சாயல்குடியில் உள்ள ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் பூட்டை உடைத்து 4 கிலோ 300 கிராம் தங்கநகை மற்றும் 1 லட்சத்து 26 ஆயிரம் பணம் திருடு போனது. அப்போது எடுக்கப்பட்ட கைரேகையும் தற்போது கடலாடியில் ஆறு வீடுகளில் பூட்டை உடைக்க முற்பட்டபோது எடுத்த கைரேகையும் ஒத்துப்போனதால், கடந்த 11 வருடங்களாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்டப் பகுதிகளில் பூட்டப்பட்ட வீடு, கடைகளைக் குறிவைத்து பூட்டை உடைத்து திருடி தலைமறைவாக இருந்துவந்த குற்றவாளி சேவுகராஜ் என்பது தெரியவந்தது.

கொள்ளையடிப்பதற்காக பூட்டிய வீட்டை நோட்டமிடும் சேவுகராஜ்
கொள்ளையடிப்பதற்காக பூட்டிய வீட்டை நோட்டமிடும் சேவுகராஜ்

தற்போது, சேவுகராஜிடமிருந்து ரூ.5,540 ரொக்க பணமும், இரண்டு தங்கத் தோடு, ஒரு தங்கத் தாலி கைப்பற்றப்பட்டு மீதமுள்ள நகைகளை தனியார் அடகு பேங்கில் வைத்த நகை ரசீதும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

சேவுகராஜுக்குத் துணையாக, திருடிய நகையை அவரின் மகன்கள் இரண்டுபேர் அடகு வைத்ததும் தெரியவந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

2011-ம் ஆண்டு நகைக்கடை கொள்ளைக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு கமுதியிலுள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகையைத் திருடியிருக்கிறார். அதன் பிறகு எவ்வித திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபடாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ச்சியாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஏழு இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறார். கடலாடியில் பூட்டை உடைத்து திருட முயன்ற நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது இவர் சிக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலாடி காவல் நிலையம்
கடலாடி காவல் நிலையம்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒன்பது இடங்களில் திருடி தலைமறைவாக இருந்து, 10-வது இடத்தில் திருட முயன்றபோது ஒன்றுமே கிடைக்காமல் திரும்பிய நிலையில், பிடிபட்ட சேவுகராஜ் தற்போது கடலாடி போலீஸாரின் தீவிர விசாரணையில் இருக்கிறார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் பேசினோம், "கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளையில் ஈடுபட்டுவந்த சேவுகராஜைக் கைதுசெய்திருக்கிறோம். அவருடன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கூட்டாளிகள் குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு இருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு, அவரின் கூட்டாளிகளும் கைதுசெய்யப்படுவார்கள்” எனக் கூறினார்.