Election bannerElection banner
Published:Updated:

தேனி: `என் சாவுக்கு ஆடிட்டர்தான் காரணம்..!’ - எஸ்.பி அலுவலகம் அருகே தீக்குளித்த முதியவர்

தீக்குளித்த முதியவர் முருகன்
தீக்குளித்த முதியவர் முருகன்

தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த முதியவரால், அந்தப் பகுதியே பரபரப்பாகக் காட்சியளித்தது.

தேனி நகர், பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 65). தச்சு வேலை செய்துவரும் முருகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். இருந்தபோதும், தச்சு வேலை செய்துவந்த அவர், பங்களாமேடு, வெல்ஃபேர் ஸ்கூல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்துவந்திருக்கிறார்.

தீக்குளித்த முதியவர் முருகன்
தீக்குளித்த முதியவர் முருகன்

முருகனுக்குச் சொந்தமாக, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஆறு சென்ட் நிலம் இருக்கிறது. காலி இடமாக இருக்கும் அந்த நிலத்தை, மூன்று வருடங்களுக்கு முன்னர் உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் முருகன் என்பவருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு, ரூ.50,000 முன்பணம் பெற்று, ஒப்பந்தமும் செய்திருக்கிறார் முருகன்.

தேனி: பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாயமான உடல்! - அரசு மருத்துவமனையில் அலட்சியம்... கொதித்த உறவினர்கள்
தற்கொலை
தற்கொலை

சில தினங்களுக்கு முன்னர், முதியவர் முருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கிறது. அதில், `ஆடிட்டர் முருகனிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு, இடத்தைக் கிரையம் செய்யாமல் இருப்பதால், ஆறு சென்ட் நிலம் இனி ஆடிட்டர் முருகனுக்குச் சொந்தம்’ எனக் குறிப்பிட்டு விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

தீக்குளித்த முதியவர் முருகன்
தீக்குளித்த முதியவர் முருகன்

இதைக் கண்ட முதியவர் முருகன், அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது தொடர்பாக, ஆடிட்டர் முருகனிடம் முறையிடவே, பதில் ஏதும் இல்லாத நிலையில், விரக்தியடைந்த முதியவர் முருகன், நேற்று (27/04/2021) காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருக்கும் தனது நிலத்துக்கு சைக்கிளில் வந்து, தன்னுடன் எடுத்து வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றித் தீப்பற்றவைத்தார். சுற்றிலும் யாரும் இல்லாத நிலையில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார் முதியவர் முருகன்.

தேனி: கம்பம் வழியாக கேரளா செல்ல `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்! - ஏலக்காய் விவசாயிகள் வேதனை

தகவலறிந்து வந்த தேனி நகர் காவல்துறையினர், முருகனின் சைக்கிளை சோதனை செய்தனர். அதில், முருகன் எழுதிய இரண்டு பக்க கடிதம் கிடைத்தது. அதில், `என்னுடைய சாவுக்கு ஆடிட்டர் முருகன்தான் காரணம்.!’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு