Election bannerElection banner
Published:Updated:

மும்பை: 73 வயதில் திருமண ஆசை; ரூ.1.3 கோடியை இழந்த முதியவர்! - பணத்தைக்கொண்டு வேறு ஒருவரை மணந்த பெண்

ஜோடி
ஜோடி

டிசோசாவிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட சங்கர் என்பவர் வருமான வரித்துறை அதிகாரிபோல் போனில் டிசோசாவை மிரட்டினார்.

மும்பையைச் சேர்ந்தவர் ஜெரோன் டிசோசா (73). தனியார் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜென்ட்டாகப் பணியாற்றிவந்தார். நிலம் ஒன்றை விற்பனை செய்ததில், அவருக்கு 2 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைப் பிரித்து வெவ்வேறு வங்கிகளில் போட்டுவைத்திருந்தார். இந்தநிலையில் அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்தார். எனவே, கடைசிக்காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை தேவை என்று ஆசைப்பட்ட டிசோசாவுக்கு, தனியார் வங்கி ஒன்றில் பயணியாற்றும் சாலினி சிங் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அந்தப் பெண் அடிக்கடி டிசோசாவை போனில் தொடர்புகொண்டு பேசினார்.

கரன்சி
கரன்சி

இதில் டிசோசாவிடம் ஓரளவுக்குப் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு சாலினி சிங் மும்பையிலுள்ள பாந்த்ரா என்ற இடத்தில் டிசோசாவை ஓட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார்.

அதோடு டிசோசாவிடம், பணத்தைத் தன்னுடன் பகிர்ந்துகொண்டால் திருமணம் செய்துகொண்டு கடைசி வரை கவனித்துக்கொள்வதாகவும் சாலினி தெரிவித்தார். இதனால் டிசோசாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தச் சந்திப்புக்கு பிறகு டிசோசாவைத் தொடர்புகொண்டு `நான் தொழில் தொடங்குகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்’ என்றும் கூறியிருக்கிறார். உடனே டிசோசா 1.3 கோடியை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மாற்றினார்.

அதன் பிறகு அடிக்கடி எப்போது திருமணம் செய்யலாம் என்று டிசோசா அந்தப் பெண்ணிடம் கேட்டுவந்தார். எதாவது காரணத்தைக் கூறி திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த சாலினி, ஒருகட்டத்தில் டிசோசாவைவின் போன் கால்களை புறக்கணிக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டு லாக்டெளன் போட்டபோது டிசோசாவிடம் வாங்கிய பணத்துடன் சாலினி சொந்த கிராமத்துக்குச் சென்று தினேஷ் சிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு டிசோசாவைத் தொடர்புகொள்ளவில்லை. சாலினியைத் தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போன டிசோசா இறுதியில் இது குறித்து அந்தேரி போலீஸில் புகார் செய்தார்.

பணம்
பணம்
representational image

புகாரை வாங்கி வைத்துக்கொண்டு அதைப் பதிவு செய்யாமல் போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில்தான் சாலினி சொந்த ஊருக்கு சென்று திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாலினி மற்றும் அவரது கணவர்மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

இந்தநிலையில், டிசோசாவிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட சங்கர் என்பவர் வருமான வரித்துறை அதிகாரிபோல் போனில் டிசோசாவை மிரட்டினார். `உங்களது வங்கிக்கணக்கில் எப்படி இவ்வளவு பணம் வந்தது...’ என்றும், வங்கிக் கணக்கை முடக்கப்போவதாகவும் அந்த நபர் தெரிவித்தார். மற்றொருபுறம் சங்கர், டிசோசாவிடம் நல்லவர்போல் பழகிவந்தார். இதனால் வருமான வரித்துறையினர் மிரட்டுவது குறித்து சங்கரிடம் டிசோசா தெரிவித்தபோது அந்தப் பணத்தைத் தனது வங்கிக்கு அனுப்பிவைத்தால் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பேன் என்று சங்கர் தெரிவித்தார்.

டிசோசாவும் அதுபோல் 2.45 கோடி பணத்தை சங்கர் வங்கிக்கு அனுப்பிவைத்தார். ஆனால், பணம் கைக்கு வந்தவுடன் சங்கரும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தார். பணம் வரும் வரை டிசோசாவை தனது பாதுகாப்பில் வைத்திருந்துவிட்டு, பணம் கிடைத்தவுடன் வேறு இடத்தில் சென்று தங்கும்படி கூறினார். உடனே தனது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி டிசோசா கேட்டார். ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று சங்கர் தெரிவித்துவிட்டார். இது குறித்தும் டிசோசா போலீசில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு