Published:Updated:

`அவர்கள் என்னை வாழவிடவில்லை!’ - 3 வீடியோக்களை வெளியிட்டு விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்

Representation Image
Representation Image

விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபரான பிரேம்குமார் கடன்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்து கிருஷ்ணா நிதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் பிரேம் குமார். தொழிலதிபரான இவர் அதேபகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவரிடம் 10 வட்டிக்கு 6 லட்சம் ரூபாயை வீடு கட்டுவதற்காக வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தில் 5.5 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்திவிட்டார். ஆனால், கடன் கொடுத்த ரங்காராவ், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை எழுதித் தருமாறு மிரட்டியுள்ளார். காவல்நிலையம் சென்றும் பிரேம்குமாருக்கு சாதகமாக முடிவு அமையவில்லை. ரங்கா ராவும் தொடர்ந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

Representation Image
Representation Image

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியே சென்ற பிரேம்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதன்பின்னர், போலீஸாரிடம் இருந்து பிரேம்குமார் மனைவிக்குப் போன் வந்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் அருகே பிரேம்குமார் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக கிருஷ்ணா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரேம்குமார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் தன்னுடைய மொபைல்போனில் மூன்று வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், ``நான் வாழ விரும்புறேன். என்னுடைய குழந்தைகளுக்கு எதாவது செய்ய விரும்புகிறேன் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், நான் அவர்களுக்கு உதவ முடியாத சூழலில் இருக்கிறேன். அவர்கள் என்னை வாழ விடவில்லை. நான் வாங்கிய 6 லட்சம் கடனை 16 லட்சமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். டிசம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு ரங்காராவ் எனக்கு போன் செய்து மிரட்டினார். சிறிதுநேரம் கழித்து ரங்காராவ் அவரது உதவியாளர் கோலா கிரன் குமார், கோலா ராம் பாபு, மகேஷ் ஆகியோர் கடைக்கு வந்து மிரட்டி கடுமையாகத் தாக்கினர்.

Representation Image
Representation Image

இந்த நான்கு பேரும் போலீஸாருக்குப் பணம் கொடுத்துள்ளனர். இதனால், ரங்காராவுக்கு ஆதரவாகப் போலீஸார் செயல்படுகிறார்கள். காவல்நிலையத்திலேயே ரங்காராவ் என்னை சாதிரீதியாகக் கடுமையாகப் பேசினார். நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என்னால் வாழ முடியவில்லை. என் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் என் முடிவை தேடிக்கொள்கிறேன்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Vikatan

இதுகுறித்து பிரேம்குமார் மனைவி பேசுகையில், ``வீடு கட்டுவதற்காக 6 லட்சம் கடன் வாங்கினோம். 5 லட்சம் வரை திரும்பக் கொடுத்துட்டோம். ஆனா அவர்களோ எங்களுக்கு வீடு வேணும் எனக் கூறி தொல்லை கொடுத்தார்கள். கடன் வாங்கும்போதே பத்திரம் போட்டுக்கலாமா என என் வீட்டுக்காரர் கேட்டார். ஆனால், அதெல்லாம் தேவையில்லை எனக் கூறிவிட்டனர். என் வீட்டுக்காரர் சிறுவயதில் இருக்கும்போதே அவர்களை நன்றாகத் தெரியும். அதை நம்பித்தான் கடன் வாங்கினார். அவர்கள் தொல்லை கொடுக்கவும் போலீஸுக்குப் போனார். போலீஸ் ஸ்டேஷனிலும், பணத்தைத் திருப்பிக் கொடுத்ததுக்கு ஆதாரம் இருக்கா எனக் கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையில வீட்டைவிட்டு வெளியே போனார். ரொம்ப நேரமாகியும் திரும்ப வரவில்லை. பக்கிங்ஹாம் கால்வாய் பக்கத்தில் அவருடைய வாகனம் உள்ளதாகச் சொன்னார்கள். அவரோட சடலத்தைத்தான் பார்க்க முடிந்தது. காவல்துறை இந்த வழக்கை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்” என்றார் மனவேதனையுடன்.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய பட்டமட்டா போலீஸ் அதிகாரிகள், `` பிரேம் குமார் காவல்நிலையத்தை அணுகியபோது இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தோம். பணத்தைத் திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இது சிவில் வழக்கு என்பதால் இந்த வழக்கை இங்கு தீர்க்க முடியாது என பிரேம்குமாரிடம் தெரிவித்தோம். மேலும், அவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக பி.எல்.சி-க்கு ( Pre-Litigation Cell ) அனுப்பினோம். ஆனால், அவர் இந்த முடிவை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு