Published:Updated:

`துப்பாக்கிமுனையில் டிரைவர்; ரூ.12 கோடி செல்போன்கள் கொள்ளை!' - ஆந்திரா அதிர்ச்சி

செல்போன்கள் கொள்ளை நடந்த கன்டெய்னர் லாரி
செல்போன்கள் கொள்ளை நடந்த கன்டெய்னர் லாரி

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மும்பைக்கு கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள், சினிமா பட பாணியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பிரபல தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு தயாராகும் செல்போன்கள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்ரன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், கன்டெய்னரில் ஏற்றப்பட்டு மும்பைக்குச் சாலைவழியாக கொண்டு செல்லப்பட்டன. கன்டெய்னர் லாரியை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் (40) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்ற கன்டெய்னர் லாரிமீது பின்னால் வந்த இன்னொரு லாரி மோதியது. அதனால் கன்டெய்னர் லாரியை இர்பான் நிறுத்தினார். இதையடுத்து பின்னால் வந்த லாரியிலிருந்து இறங்கியவர்கள் இர்பானிடம் தகராறு செய்தனர்.

கொள்ளை
கொள்ளை
Representational Image

அந்தச் சமயத்தில் துப்பாக்கியைக் காட்டி டிரைவர் இர்பானை ஐந்து பேர் கொண்ட கும்பல் மிரட்டியது. அடுத்து இர்பானை சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல், அவரின் கை கால்களைக் கட்டிப்போட்டதோடு, சத்தம் போடாமலிருக்க அவர் வாயில் துணியை அடைத்துவைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கன்டெய்னர் லாரியைக் கடத்திய கும்பல், அதிலிருந்த செல்போன் பாக்ஸ்களைத் தங்கள் லாரியில் ஏற்றியது. செல்போன் பாக்ஸ்கள் ஏற்றப்பட்டதும், கன்டெய்னர் லாரியை சாலயோரத்தில் நிறுத்திவிட்டு, கொள்ளை கும்பல் எஸ்கேப் ஆனது.

கன்டெய்னர் லாரியோடு டிரைவர் இர்பானையும் அங்கேயே விட்டுவிட்டு கொள்ளைக் கும்பல் சென்றது. செல்போன்கள் கொள்ளைபோனது தொடர்பாக டிரைவர் இர்பான், நகரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மத்தய்யா வழக்கு பதிவு செய்து கொள்ளைக் கும்பலைத் தேடிவருகிறார். கொள்ளை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.

கொள்ளை நடந்த கன்டெய்னர் லாரி
கொள்ளை நடந்த கன்டெய்னர் லாரி

டிரைவர் இர்பானுக்கு இந்தி மட்டுமே தெரிவதால், அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க இந்தி தெரிந்த போலீஸார் மூலம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையில் கொள்ளைச் சம்பவம் குறித்து தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளைபோனதாக செல்போன் நிறுவன அதிகாரிகள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆந்திர மாநில போலீஸார் கூறுகையில், ``கன்டெய்னர் லாரியைப் பின்தொடர்ந்துவந்த லாரியிலிருந்து இறங்கிய கொள்ளைக் கும்பல்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக டிரைவர் இர்பான் தகவல் தெரிவித்துள்ளார். அதனால், கன்டெய்னர் லாரி சென்ற வழித்தடத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகிறோம். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் டிரைவர் இர்பான்மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

டிரைவர் இர்பான்
டிரைவர் இர்பான்
சென்னை: தம்பிக்காக அண்ணன் போட்ட சபதம்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கொலை!

டிரைவர் இர்பான் சொல்லும் தகவல்படி பார்த்தால், சினிமா பாணியில் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. இந்த வழக்கில் சிசிடிவி கேமரா பதிவுகள் முக்கியத் தடயமாக இருக்கும் என நம்புகிறோம். மேலும், செல்போன் சிக்னல்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை யாராவது பயன்படுத்தினாலும் கொள்ளைக் கும்பல் எளிதில் சிக்கிக்கொள்ளும். ஏனெனில் ஐஎம்இஐ நம்பர்கள் மூலமாகவும் கொள்ளைக் கும்பலைத் தேடிவருகிறோம். கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

நகரியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு