Published:Updated:

`காத்திருங்கள், வந்துவிடுகிறேன்' - 26 வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயர்; அதிர்ச்சியில் டிரைவர்

சென்னையில் உள்ள 29 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆட்டோவில் வந்த இன்ஜினீயர், 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு

ஆந்திராவைச் சேர்ந்தவர் ஈஸ்வர் ராவ் (32). இவர், இன்ஜினீயரிங் படித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் குடியிருந்தார். அந்தப்பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில காரணங்களுக்காக ஈஸ்வர் ராவ் சரிவர வேலைக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் திருவான்மியூர் நியூ பீச் பகுதிக்குச் சென்ற ஈஸ்வர் ராவ், அங்கிருந்து ஆட்டோவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஈஸ்வர் ராவ், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரில் அமைந்துள்ள 29 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆட்டோவில் வந்துள்ளார்.

Representational image
Representational image

ஆட்டோவிலிருந்து இறங்கிய ஈஸ்வர் ராவ், `காத்திருங்கள், வந்துவிடுகிறேன்' என்று கூறிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார். ஈஸ்வர் ராவ் வருகைக்காக ஆட்டோ டிரைவரும் காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ஈஸ்வர் ராவ் வரவில்லை.

அடுக்குமாடியின் 26வது மாடிக்குச் சென்ற ஈஸ்வர் ராவ், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸிக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஈஸ்வர் ராவ்வை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஈஸ்வர் ராவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஈஸ்வர் ராவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சமீபகாலமாக அவரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்துள்ளன. நண்பர்களுடன் தங்கியிருந்த ஈஸ்வர் ராவ், சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், நண்பர்களின் வீடுகளிலும் அவர் தங்காமல் வெளியிலேயே சுற்றித் திரிந்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு

ஈஸ்வர் ராவிற்கு குறிப்பிடும் வகையில் சொந்தக்காரர்கள் இல்லை. இதனால், தனிமையில் அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்துள்ளார். இதன்காரணமாக மது பழக்கத்துக்கு அடிமையான ஈஸ்வர் ராவின் வாழ்க்கை திசைமாறியுள்ளது. அவரை நண்பர்களும் உறவினர்களும் என யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் மனம் உடைந்த ஈஸ்வர் ராவ், 26 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்துள்ளது.

`மனம்போல வாழ விரும்பினேன்!’ - செல்போன் திருட்டில் சிக்கிய  சென்னைக் கல்லூரி மாணவியின் வாக்குமூலம்

இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸார் கூறுகையில், ``இன்ஜினீயர் ஈஸ்வர் ராவ், ஆரம்பத்தில் துரைப்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து நண்பர்களுடன் சில இடங்களில் தங்கியிருந்துள்ளார். இறுதியில் தங்குவதற்கு இடமில்லாமல் அவர் தவித்துள்ளார். இதனால்தான் சம்பவத்தன்று கடற்கரைக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வந்தபிறகுதான் அவர் தற்கொலை செய்துள்ளார். அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரை அடுக்குமாடி குடியிருப்பு முன் நிற்கும்படி கூறியுள்ளார். இதனால் டிரைவர் அங்கேயே காத்திருந்துள்ளார். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோதுதான் ஈஸ்வர் ராவ் நுங்கம்பாக்கம் சென்ற தகவல் தெரியவந்தது.

suicide
suicide

அவர் தற்கொலை செய்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது இங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு ஈஸ்வர் ராவ் வருவார் என்று தெரிவித்தனர். இன்ஜினீயர் ஈஸ்வர் ராவ், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம். அவர் குறித்த தகவல்களை அவருடன் பணியாற்றியவர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

சென்னையில் 26வது மாடியிருந்து இன்ஜினீயர் ஈஸ்வர் ராவ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.