Published:Updated:

`ஆந்திர ஐஜி காந்தாராவ் வந்தாலே அதிரடி இருக்கும்!'- செம்மர கும்பலை குறிவைப்பதாக வேலூர் போலீஸ் தகவல்

செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக வேலூர் மாவட்ட போலீஸாருடன் ஆந்திர மாநில சிறப்பு ஐ.ஜி காந்தாராவ் இன்று ஆலோசனை நடத்தினார்.

வேலூர் எஸ்.பி அலுவலகம்
வேலூர் எஸ்.பி அலுவலகம்

ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் அடர்ந்துவளர்ந்துள்ள செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்திச்சென்று சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்கள். செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் தடுக்க முடியவில்லை. 

ஆந்திர ஐ.ஜி காந்தாராவ் வந்த கார்
ஆந்திர ஐ.ஜி காந்தாராவ் வந்த கார்

குறிப்பாக வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காக வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களே அதிகமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சேஷாசல வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் திருவண்ணாமலை, தர்மபுரியைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் பலியாகினர். அதன் பிறகும், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோரை ஆந்திர போலீஸார் செம்மர வழக்கில் கைதுசெய்தனர். 

``ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஐ.ஜி காந்தாராவ் வந்திருக்கிறார் என்றால் அதிரடி இருக்கும்.’’
வேலூர் மாவட்ட போலீஸார் தகவல்.

எனினும், இரு மாநில போலீஸார் அறிவுறுத்தியும் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மலைக் கிராமங்களிலிருந்து செம்மரக் கடத்தலுக்கு பலரை மூளைச்சலவை செய்து தரகர்கள் அழைத்துச் செல்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இந்த நிலையில், ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஐ.ஜி. காந்தாராவ் தலைமையிலான போலீஸார் இன்று வேலூர் வந்துள்ளனர். செம்மரக் கடத்தலைத் தடுக்கவும், இங்குள்ள தொழிலாளர்கள் ஆந்திர வனப்பகுதிக்கு வருவதைத் தடுக்கவும் வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஐ.ஜி காந்தாராவ் தீவிர ஆலோசனை நடத்தினார். 

செம்மரம்
செம்மரம்

ஏழைத் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அழைத்துவரும் தரகர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் இயங்கும் மாஃபியா கும்பல்களைக் கண்டறியவும் முடிவுசெய்திருக்கிறார்கள்.