Published:Updated:

`மருந்து வாங்கச் சென்றவர் சடலமாகத் திரும்பிய சோகம்’ – போலீஸார் செயலால் சாலையில் திரண்ட மக்கள்

ஆந்திரா
ஆந்திரா

ஆந்திராவில் மருந்து வாங்கச் சென்ற நபரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

கொரோனா தாக்கம் காரணம் இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சமூகவிலகலைக் கடைப்பிடிக்கும் வண்ணம் மத்திய அரசானது இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் எதிர்பாராதவிதமாக நடக்கும் சில சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் சங்கடங்களை ஏற்படுத்தி வருகின்றன.

ஊரடங்கு
ஊரடங்கு

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த முகமது கவுஸ் ( வயது 35) இன்று காலை மருந்து வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மெடிக்கலுக்குச் சென்றுள்ளார். அப்போது வழியில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸாரின் கேள்விகளுக்கும் அவரிடமிருந்து சரியான பதில்கள் இல்லாததால் இருசக்கர வாகனத்தின் சாவியை வாங்கிக்கொண்டு அமரவைத்ததாகக் கூறப்படுகிறது. இதயநோயாளியான அந்த நபரின் உடல்முழுவதும் வியர்த்துக் கொட்டியுள்ளது. இதனையடுத்து உறவினர் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

`இறுதிமூச்சு வரை சேவை!’ - கொரோனாவுக்குப் பலியான 84 வயது `நர்ஸ்’

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரது சடலத்துடன் சாலையில் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ அம்பாதி ராம்பாபு மற்றும் உயர்காவல் அதிகாரிகள், பொதுமக்களை சமாதானம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.

மரணம்
மரணம்

இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், ``நரசரைப்பேட்டை பகுதியில் புதிதாக சிலருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்தப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்அதிகாரி முகமது கவுஸை விசாரித்துள்ளார்.

இன்ஸ்பெக்டரின் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிக்காததால் அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அந்த நபருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் அமரவைக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர் வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளார். குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

முகமது கவுஸ் உறவினர் பேசுகையில், ``மருந்து வாங்க மெடிக்கலுக்குச் சென்றதாகவும் மருந்து சீட்டை வீட்டில் வைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். நான் பார்க்கும்போது அவர் தெருவில் மயக்கமடைந்திருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். அரைமணி நேரத்தில் கவுஸ் உயிரிழந்துவிட்டார்” எனக் கூறினார்.

காவல்துறையின் விளக்கத்தை முகமது கவுஸ் குடும்பத்தினர் ஏற்கவில்லை. ``போலீஸார் அவரை அடித்துள்ளனர். காவல்துறையினர் உண்மையை மறைக்கின்றனர்" எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு