பெட்ரோல் பங்க்-கில் பதிவான காட்சி.. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு!- முன்விரோதத்தால் நடந்த விபரீதம்

ஆந்திராவில் வீடு பற்றி எரிந்ததில் 5 வயதுச் சிறுமி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரியைச் சேர்ந்தவர் சத்யவதி. இவரது இளைய மகளுக்குத் திருமணப்பேச்சு எடுத்தபோது இவர்கள் வசித்து வரும் துல்லா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரின் குடும்பத்தினர் அணுகியுள்ளனர். உறவுக்காரர் என்பதால் ஸ்ரீனிவாஸ் (27) குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்பின்னர் ஸ்ரீனிவாஸின் நடவடிக்கை சரியில்லாததால் அவருக்குப் பெண் தர மறுத்துவிட்டார். இதையடுத்து சத்தியவதி தன்னுடைய மகளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் சத்தியவதியிடம் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜனவரி 17-ம் தேதி சத்யவதியின் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாஸ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தியவதியின் குடும்பத்தினரைக் கத்தியைக்கொண்டு தாக்கியுள்ளார். இதில் சத்தியவதியின் குடும்பத்தினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீனிவாஸ் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சத்தியவதியின் மூத்த மகள் தன் இரண்டு குழந்தைகளுடன் கிராமத்துக்கு வந்துள்ளார். இதற்கிடையே, சத்தியவதியின் வீடு இன்று அதிகாலை பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் இருந்தவர்களை மீட்டு ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவத்தில் சத்யவதியின் 18 வயது மகனும் அவரது 5-வயது பேத்தியும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். கடுமையான காயங்களுடன் சத்தியவதியும் அவரது மூத்த மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பத்தில் மேலும் இரண்டு குழந்தைகளுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீனிவாஸ்தான் வீட்டுக்குத் தீவைத்திருக்க வேண்டும் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், `திருமணம் தொடர்பாக ஸ்ரீனிவாஸ் என்பவருக்கும் சத்யவதிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. அவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் நள்ளிரவு 1.20 மணியளவில் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஸ்ரீனிவாஸ் பெட்ரோல் வாங்கியது பதிவாகியுள்ளது. அங்கு பெட்ரோல் வாங்கிய கையோடு சத்தியவதியின் வீட்டுக்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். ஸ்ரீனிவாஸ் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் மேலும் விவரங்கள் தெரியவரும்’ என்றார்.