Published:Updated:

`செம்மரக் கடத்தல் மன்னன் டு ஜவுளி வியாபாரி!’ - கோவையில் சிக்கிய பாஷா பாய்

கைதுசெய்யப்பட்ட ஹக்கீம் பாஷா
கைதுசெய்யப்பட்ட ஹக்கீம் பாஷா

ஆந்திராவைச் சேர்ந்த சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன் ஹக்கீம் பாஷா கோவை குனியமுத்தூரில் கைதுசெய்யப்பட்டார்.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர், ஆந்திராவைச் சேர்ந்த சர்வதேச செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி என்பதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் இருக்கின்றன. சர்வதேசச் சந்தையில், இந்த செம்மரக் கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால், செம்மரத்தை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தி, கோடிக்கணக்கில் பணம் பார்த்துவரும் நெட்வொர்க்குகள் இயங்கிவருகின்றன.

செம்மரக் கடத்தல்
செம்மரக் கடத்தல்
`ஆந்திர ஐஜி காந்தாராவ் வந்தாலே அதிரடி இருக்கும்!'- செம்மர கும்பலை குறிவைப்பதாக வேலூர் போலீஸ் தகவல்

அப்படி, பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் `பாஷா பாய்’ என்றழைக்கப்படும் ஹக்கீம் பாஷா (41). கோவையில் தலைமறைவாகியிருந்த அவரை, கோவை போலீஸார் உதவியுடன், ஆந்திர போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் பேசியபோது, ``கடந்த திங்கள்கிழமை கடப்பா மாவட்டத்தில், ஒரு கும்பல் கார்களில் செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றிருக்கிறது. வாகனச் சோதனையில் இருந்து எஸ்கேப் ஆனதால், போலீஸார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றிருக்கிறார்கள். வள்ளூர் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, அந்த கார்கள் ஒரு டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது மோதியதால் தீப்பிடித்து, அது அருகிலிருந்த அந்த கார்களுக்கும் பரவியிருக்கிறது.

கடப்பா விபத்து
கடப்பா விபத்து

இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இரண்டு பேர் கடப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூலமாகத்தான் பாஷா கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திராவிலிருந்து வந்த தனிப்படை போலீஸ், கோவை போலீஸ் டீமுடன் இணைந்து அவரைக் கைதுசெய்தோம்” என்றனர்.

Vikatan

குனியமுத்தூர் காவேரி நகரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பாஷா, நேற்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். பாஷாவின் செல்போன் எண் சிக்னலைத் தொடர்ந்து ட்ரேஸ் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பாஷா கோவையில் ஜவுளி வியாபாரியாக இருந்திருக்கிறார். ஆனால், அது தன் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, பாஷா போட்டுக்கொண்ட கெட்டப்தானாம். கோவையில் இருந்தபடியே, அவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

செம்மரக் கடத்தல் ஹக்கீம் பாஷா
செம்மரக் கடத்தல் ஹக்கீம் பாஷா

இங்கிருந்தபடியே, தனது நெட்வொர்க்கை போனில் வழிநடத்தி கடத்தலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார். இதையடுத்து, பாஷாவைக் கைதுசெய்து, கடப்பாவுக்கு அழைத்து சென்றார்கள். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு