தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்பட்ட கஞ்சா ஒரு காலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கிராக்கி அதிகமாக இருந்தது. தேனியில் இருந்து கேரளா, ஆந்திராவுக்கு கஞ்சா கடத்தல் நடந்து வந்தது. ஆனால் தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிரிடுவதை வனத்துறையினர் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிட்டனர். ஆனால் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆந்திராவில் விளைவிக்கப்படும் கஞ்சா, தேனி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்கின் தனிப்பிரிவைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான போலீஸார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக தேனி மாவட்ட எல்லைப்பகுதி காவல்துறை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி - மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் விரைந்து வந்து வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக தீவிர சோதனையிட்டு அனுப்பி வைத்தனர் . அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மிக வேகமாக வந்த டெம்போ சரக்கு வாகனத்தை மடக்கிப் பிடித்தனர் . அந்த வாகனத்தை சோதனை செய்ததில் கருவாடு மூடைகளிடையே கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்(33), இளவனூர் அருகே உள்ள சிலுப்பியைச் சேர்ந்த செல்வராஜ்(31), சின்னசாமி (34) ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான போலீஸார் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர்களிடமும் தீவிர விசாரணை செய்தனர்.

இதையடுத்து அவர்களை உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் 1,200 கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் இவைகளை மதுரை போதை தடுப்பு விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.