Published:Updated:

`அதிர்ஷ்டம் தரும் நாணயம்; பிரசாதத்தில் சைனைடு!' - ஆந்திர காவல்துறையை அதிரவைத்த வாக்குமூலம்

ஆந்திரப் பிரசேத்தில் அதிர்ஷ்டம் தரும் நாணயம் தருவதாகக் கூறி தொடர் கொலையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Representation Image
Representation Image

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜூ என்பவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அக்டோபர் மாதம் மரணமடைந்தார். பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கிளம்பியவர் சடலமாகத்தான் திரும்பினார். அவர் எடுத்துச் சென்ற பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை. உறவினர்களும் நண்பர்களும் மாரடைப்பு காரணமாக நாகராஜூ உயிரிழந்திருக்கலாம் எனக் கருதினர். பணம் வங்கியில் டெபாசிட் ஆகாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலில் சந்தேகத்துக்கிடமான வகையில் எந்தக் காயங்களும் இல்லை. அதனால் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் கருதினர். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வராததால் காவல்துறையினர் எந்த முடிவுக்கும் வரவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நாகராஜூ உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மரணம்
மரணம்

நாகராஜூ கடைசியாக எங்கே சென்றார். அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் சோதனை செய்தனர். அதில் சில்லரி சிவா என்ற நபருக்கு அதிக அழைப்புகள் சென்றதை போலீஸார் கண்டறிந்தனர். சிம் ஹத்ரி என்கிற சில்லரி சிவா என்ற நபர் எளூரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுவந்துள்ளார். அந்தப்பகுதியில் விற்பனைக்கு வரும் வீடுகள் மற்றும் நிலங்களைக் கைமாற்றி அதன் மூலம் கமிஷன் தொகை பெற்றுவந்துள்ளார்.

அவரைப்பற்றி சுற்றுவட்டாரத்தில் விசாரித்துள்ளனர். அப்போது, `அதிர்ஷ்டம் தரும் மந்திரக்காசுகள் தன்னிடம் இருக்கிறது; இதைப் பெற்றுக்கொண்டால் செல்வம் பெருகும்' எனக் கூறி சிலைகள் மற்றும் நாணயங்களை விற்றுவரும் தகவலும் கிடைத்தது. செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் சிவாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரது பதில்கள் காவல்துறையினருக்கு திருப்தியளிக்கவில்லை. போலீஸாரின் தீவிர விசாரணையில் நாகராஜூவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சில கொலைகளைச் செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 தங்க நாணயம்
தங்க நாணயம்

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக சிவா பணிபுரிந்து வந்துள்ளார். சொந்தமாக சலவைக்கடையும் அருகில் வைத்துள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைக்கு வரும் வீடுகளை விற்பது தொடர்பாக இடைத்தரகர் வேலை செய்துவந்துள்ளார். இதன் மூலம் 20,000 கமிஷன் தொகையும் கிடைத்துவந்துள்ளது. சிவாவின் நட்புவட்டமும் பெருகியுள்ளது. அப்போது அவர்களிடம் தன்னிடம் சக்திவாய்ந்த மந்திர நாணயங்கள் மற்றும் சிலைகள் இருப்பதாகக் கூறி வந்துள்ளார். தன்னைத் தேடி வருபவர்களிடம் இந்த நாணயங்கள் மற்றும் சிலைகள் குறித்து பேசி அவர்களது ஆசையைத் தூண்டிவிடுவார். அவர்களும் பணத்தின் மீது இருக்கும் மோகத்தால் இவரது பேச்சில் மயங்கிவிடுவார்கள். நாணயங்கள் மற்றும் சிலைகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.

அதிகாரம்... சொத்து... ஆசை... 6 பேர் கொலையில் போலீஸை மிரள வைத்த கேரள பெண்ணின் வாக்குமூலம்!

எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தன்னிடம் மந்திர நாணயங்களை வாங்கிச் சென்றதாக விசாரணையின்போது கூறியுள்ளார். தன்னிடம் பணம் பெற்றுச் சென்றவர்களை கோயிலுக்கு வரச் சொல்வாராம். அங்கு பிரசாதம் என்ற பெயரில் சைனைடு கலந்த தீர்த்தத்தைக் கொடுத்துவிடுவார். இதைச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். விஜயவாடாவில் நிக்கல் பட்டறையில் பணிபுரியும் தனது நண்பர் மூலம்தான் சைனைடு பெற்றுள்ளார். அவரது போனிலிருந்து 220 நபர்களின் எண்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணையில் 10 பேர் மர்மமான முறையில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. எளூரு பகுதியில் 4 பேரும் ராஜமுந்திரி பகுதியில் 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. யாரும் புகார் தரவில்லை. இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

 விஷம்
விஷம்

இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சிவாவிடமிருந்து ரூ.1.6 லட்சம் ரொக்கம் மற்றும் 26 தங்க நாணயங்களைக் கைப்பற்றியுள்ளனர். மர்மமாக உயிரிழந்தவர்களில் 5 நபர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன. மற்றவர்களின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் பேசி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.