Published:Updated:

`கையில் கண்ணாடித் துண்டு; எரிக்கப்பட்ட பெண் உடல்!' - பிரியங்கா மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கொடூரம்

ஷம்ஷாபாத் பெண் உயிரிழப்பு
ஷம்ஷாபாத் பெண் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலைசெய்யப்பட்ட அதே பகுதியில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. கால்நடை மருத்துவரான இவர் கடந்த 27-ம் தேதி தன் வீட்டுக்குத் திரும்பும் வழியில், நான்கு பேரால் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் தெலங்கானா மட்டுமல்லாது மொத்த இந்தியாவையும் உலுக்கியது.

பிரியங்கா ரெட்டி
பிரியங்கா ரெட்டி

`பிரியங்கா மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. பிரியங்கா ரெட்டியின் பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், அதே தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தில் மேலும் ஒரு பெண்ணின் உடல் எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சரியாக 1.5 கி.மீ தொலைவில் உள்ள சிட்டுலகுட்டா என்ற இடத்தில் ஒரு சிறிய கோயிலுக்கு அருகில்தான் இன்னொரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு அந்த வழியாகச் சென்ற நண்பர்கள் மூவர், சாலையின் ஓரத்தில் ஏதோ எரிவதைப் பார்த்துள்ளனர். அருகில் சென்றபோதுதான் அது பெண் என்று தெரிய வந்துள்ளது. உடனடியாகக் காவல்கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் உடலை அணைக்க முயன்றுள்ளனர்.

இறந்த பெண் புடவை அணிந்திருந்துள்ளார். அவரது கையில் கண்ணாடித் துண்டுகள் இருந்தன. சம்பவ இடத்திலிருந்து சில பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஷம்ஷாபாத் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்தப் பெண்ணின் உடல் 70 சதவிகிதம் எரிந்துவிட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்து, பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும் எனக் காவலர்கள் தெரிவிக்கின்றனர். அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர். சம்பவம் நடந்தது எப்படி என்பன போன்ற எந்தத் தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. அந்தப் பெண்ணின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கொடூர சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஷம்ஷாபாத் காவல் உதவி ஆணையர் அஷோக் குமார், `` நேற்றிரவு 9 மணியளவில் சாலையில் ஒரு பெண்ணின் உடல் எரிந்துகொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகக் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியான பிறகே, அந்தப் பெண் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண்

இறந்த பெண் புடவை அணிந்திருந்துள்ளார். அவரது கையில் கண்ணாடித் துண்டுகள் இருந்தன. சம்பவ இடத்திலிருந்து சில பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து விசாரணை தொடர்ந்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதனையிடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொலை அல்லது தற்கொலை என்ற இரண்டு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

கால்நடை மருத்துவர் கொலைக்கும் நேற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் நிகழ்ந்த கொடூர கொலைகளால், தெலுங்கானா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு