Published:Updated:

`ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றார்!' -பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது மற்றொரு பாலியல் புகார்

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல்
பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல்

இதுபோன்று கன்னியாஸ்திரிகளுக்கு பிரச்னை வரும்போது, சபையும் சபை நிர்வாகிகளும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்.

கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முளய்க்கல், 2014 முதல் 2016 வரை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து, பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர். இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

`பிஷப் பிராங்கோவைத் தொடர்ந்து பாதிரியார் மனோஜ்!' - கேரளாவை அதிரவைத்த அடுத்த பாலியல் புகார்

இந்த நிலையில், கன்னியாஸ்திரி மீதான பாலியல் வழக்கில் போலீஸாரிடம் சாட்சி வாக்குமூலம் அளித்த மற்றொரு கன்னியாஸ்திரி, பிஷப் பிராங்கோ முளய்க்கல் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார். மொபைல் வீடியோ அழைப்பில் பேசிய பிஷப், பாலியல் ரீதியாகப் பேசியதாகவும், உடல் பாகங்களைக் காட்டும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நேரில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க பலவந்தமாக முயன்றதாகவும், பிராங்கோ முளய்க்கலுக்கு பயந்து புகார் அளிக்கவில்லை எனவும் கன்னியாஸ்திரி வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கன்னியாஸ்திரி அனுபம
கன்னியாஸ்திரி அனுபம

இதுகுறித்து கொச்சி குறவிலங்காடு சபை கன்னியாஸ்திரி அனுபமா கூறுகையில், ``பிஷப் பிராங்கோ முளய்க்கலால் பல கன்னியாஸ்திரிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. மேலும் ஒரு கன்னியாஸ்திரி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி குறித்த விவரங்கள் வெளியே வரக்கூடாது என நினைக்கிறோம். இதுபோன்று கன்னியாஸ்திரிகளுக்கு பிரச்னை வரும்போது, சபையும் சபை நிர்வாகிகளும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்.

இவ்வளவு நாள்களாக கன்னியாஸ்திரிகள் உண்மைக்கு மாறாகக் கூறுவதாக திரித்துச் சொன்னார்கள். இப்போது, பொதுமக்களும் எங்களை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். பிஷப் பிராங்கோ முளய்க்கல் தவறு செய்திருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியவந்துள்ளது. சபை நிர்வாகிகள் மௌனமாக இருப்பது நீதி வழங்காமல் இருப்பதற்குச் சமமாகும். புகார் அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சபை எந்த பதிலும் கூறவில்லை. கன்னியாஸ்திரிகள் பாதிக்கப்படுவது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது இதன்மூலம் புரிகிறது.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல்
பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல்

தவறு செய்த பிஷப்பை ஜலந்தர் பகுதியின் தலைமையில் இருந்து மாற்றியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணையைக் காலதாமதம் செய்வதற்காக தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என பிஷப் பிராங்கோ முளய்க்கல், கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தவறு செய்த பிஷப்பிற்கு தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு