ஒடிசா ஹோட்டலில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் அன்டோவ் (Pavel Antov) என்பவர் கடந்த டிசம்பர் 21-ம் தேதியன்று தன்னுடைய 66-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மூன்று நண்பர்களுடன் ஒடிசாவிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருக்கிறார். அன்றிரவு இவர்கள் நன்றாக மது அருந்திவிட்டு ஹோட்டலில் அவரவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றுவிட்டனர். அடுத்தநாள் காலையில் அவர்களில் விளாடிமிர் புடானோவ் (Vladimir Budanov) என்பவர் அவருடைய அறையில் இறந்துகிடந்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்ததாகவும், அதிக அளவு மது அருந்தியிருந்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

விளாடிமிர் புடானோவ் உயிரிழந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, பாவெல் அன்டோவ் அதே ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மரணமடைந்திருக்கிறார். ஒரே வாரத்தில் இரண்டு ரஷ்யர்கள் அதே ஹோட்டலில் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியது. இருப்பினும் ராயகடா போலீஸ், பாவெல் அன்டோவின் இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்துப் பேசிய விசாரணை அதிகாரி விவேகானந்த ஷர்மா, ``டிசம்பர் 21-ம் தேதி ராயகடாவிலுள்ள ஹோட்டலில் நான்கு பேர் தங்க வந்தனர். டிசம்பர் 22-ம் தேதி காலை அவர்களில் ஒருவர் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவருக்கு இதயம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதில், தன் நண்பன் உயிரிழந்ததன் காரணமாக பாவெல் அன்டோவ் மிக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இதையடுத்து, டிசம்பர் 25-ம் தேதியன்று அவர் உயிரிழந்தார்'' எனக் கூறினார்.
முன்னதாக கடந்த ஜூலையில், பாவெல் அன்டோவின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, `உக்ரைன் மீதான தாக்குதல், பயங்கரவாதம்' என ஒரு குறுஞ்செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் பாவெல் அன்டோ, அந்தச் செய்தி வேறு யாரோ ஒருவரால் வெளியானது என்று கூறி மன்னிப்புக் கோரியிருந்தார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவில் இறந்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பு, "ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள பாரதீப் துறைமுகப் பகுதியில் இருந்த கப்பலில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் இறந்துகிடந்தார். அவர் கப்பலின் தலைமைப் பொறியாளர் மில்யாகோவ் செர்ஜே (Milyakov Sergey) என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அந்தக் கப்பலில் இந்திய மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் உட்பட 23 பேர் பணியாற்றிவருகின்றனர். மில்யாகோவ் செர்ஜே இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பாரதீப் துறைமுக அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.