Published:Updated:

காஞ்சிபுரம்: பத்திரப் பதிவுக்கு ரூ.20,000 லஞ்சம்; இணை சார் பதிவாளர், புரோக்கர் இருவரிடம் விசாரணை!

காஞ்சிபுரத்தில் பத்திரப் பதிவு செய்ய 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர், புரோக்கர் ஆகியோரைக் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பிடித்தனர்.

பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பரிந்துரையின் பேரில் ஏழு சார் பதிவாளர்கள் உட்பட 30 பேர் பத்திரப் பதிவு இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆன்லைன் மூலமாகவே அனைத்துப் பதிவுப் பணிகள் நடந்தாலும் இன்னமும் சில சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவுத்துறைமீது கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image
லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குச் சென்ற சார் பதிவாளர்களின் ரகசிய ஃபைல்கள்! - 7 பேர் அதிரடி இடமாற்றம்

இந்தநிலையில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையில் போலீஸார் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது பத்திரப் பதிவுக்கு 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இணை சார் பதிவாளர் சீனிவாசன், அவருக்குத் தரகராக இருந்த பன்னீர்செல்வம் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். அலுவலகத்திலிருந்து பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கைதுசெய்யப்படுவார்கள் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு