Published:Updated:

புதுச்சேரி: `ஆவணமின்றி பதுக்கப்பட்ட நடராஜர் சிலைகள்’- பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு போலீஸ்!

நடராஜர் சிலை
நடராஜர் சிலை

புதுச்சேரியில் உரிய ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு நடராஜர் மற்றும் இரண்டு அம்மன் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ராஜாராம் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் சுரேஷ் . இவரது வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. அதனடிப்படையில் புதுச்சேரிக்கு வந்த திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான டீம், சுரேஷ் வீட்டில் சாமி சிலைகள் உள்ளதா என அனுமதியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை
பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை

அப்போது சுரேஷ் ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 3 அடி உயரமுள்ள இரண்டு நடராஜர் சிலைகளும், அம்மன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த சிலைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த சிலைகள் பித்தளை என்று சுரேஷ் தரப்பினர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் அந்த சிலைகளை போலீஸாரிடம் தருவதற்கும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை
பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை

அதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிலைகளை பறிமுதல் செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவைகளை தமிழகம் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன், “புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் சாமி சிலைகள் பதுக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த சிலைகளை வைத்திருப்பதற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

`116 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலைகள்!’ - தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

அதேபோல அந்த சிலைகள் குறித்து அவர்கள் கூறிய தகவலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். துறைசார்ந்த வல்லுநர்கள் அந்த சிலைகளை ஆய்வு செய்த பின்புதான் அவை ஐம்பொன் சிலைகளா என்பது தெரியவரும். அதன்பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு