Published:Updated:

`அடம் பிடித்தார், ஆசையாக ஊட்டிவிட்டேன்!' - கணவரைக் கொன்ற `தோசை மாவு' அனுப்பிரியா வாக்குமூலம்

`கணவரை ஏன் கொலை செய்தேன்?' என்பது குறித்து போலீஸாரிடம் அனுப்பிரியா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுரேஷ், அனுப்பிரியா
சுரேஷ், அனுப்பிரியா

சென்னையை அடுத்த புழல், புத்தகரம் பகுதியில் உள்ள வெங்கடசாய் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். கறிக்கடையில் வேலைபார்த்துவந்தார். இவரின் மனைவி அனுப்பிரியா. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில், சுரேஷைக் கொலை செய்த குற்றத்துக்காக அனுப்பிரியா மற்றும் அவரின் தம்பி முரசொலி மாறன் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சுரேஷ் வேலை பார்த்த கடையின் உரிமையாளர் வினோத்குமார்தான் முதலில் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கதுரை, சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில்தான் மனைவி அனுப்ரியாவால் சுரேஷ் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, அனுப்பிரியாவிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், முரசொலிமாறனுடன் சேர்ந்து சுரேஷைக் கொலை செய்ததை அனுப்பிரியா ஒப்புக்கொண்டார்.

சுரேஷ்
சுரேஷ்

சுரேஷ் கொலைக்கான காரணத்தையும் அனுப்பிரியா தெரிவித்தார். அதை வாக்குமூலமாக போலீஸார் பதிவு செய்துள்ளனர். அனுப்பிரியா அளித்துள்ள வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா, முகையூர் பகுதி. பி.ஏ. வரையில் படித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், சுரேஷின் அண்ணன் ரமேஷுக்கு எங்கள் ஊரில் திருமணம் நடந்தது. சுரேஷ் எனக்கு தூரத்து உறவினர். இதனால் அந்தத் திருமணத்துக்கு சென்றேன்.

அப்போதுதான் சுரேஷைச் சந்தித்தேன். அவர் பார்ப்பதற்கு சினிமா ஸ்டார் போல அழகாக இருப்பார். எங்களின் முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்தது. இருவரும் போனில் பேசி காதலை வளர்த்தோம். எங்களின் காதல் இருவீட்டிலும் தெரிந்தது. அப்போது சுரேஷ், 9-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளார் என்று என்னுடைய வீட்டில் யோசித்தனர். ஆனால், பிடிவாதமாக சுரேஷைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறினேன். அதன்பிறகு எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு புழல், புத்தகரம், பெரியார் தெருவில் குடியிருந்தோம். அப்போது மகன் பிறந்தான்.

எங்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. இந்தச் சமயத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மெடிக்கல் ஷாப்புக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு சென்றபிறகு எனக்கு அடிக்கடி போன் வரும். அதை சுரேஷ் சந்தேகப்பட்டார். மேலும், தினமும் வீட்டுக்கு குடித்துவிட்டு வரும் சுரேஷ், என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் நிம்மதி இழந்தேன். மனவருத்தத்தோடு வேலைக்குச் சென்றுவந்தேன்.

எனக்கு ஆறுதலாக முகையூரைச் சேர்ந்த பக்கத்துவீட்டுப் பையன் முரசொலிமாறன் இருந்தார். அவனும் நானும் அக்கா தம்பியாக பழகினோம். ஆனால், அதையும் சுரேஷ் சந்தேகப்பட்டார். இதனால் என்னுடைய குடும்ப வாழ்க்கை நரகமானது. இந்தச் சமயத்தில் அதிகளவில் குடித்துவிட்டு வரும் சுரேஷ், எனக்கு சொல்ல முடியாத தொந்தரவுகளைக் கொடுத்தார். அவரின் வார்த்தைகளால் தினமும் செத்துக்கொண்டிருந்தேன். இதனால்தான் சுரேஷைக் கொலை செய்ய முடிவு செய்தேன்.

அனுப்பிரியா
அனுப்பிரியா
தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

கடந்த 13-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்தேன். அதை எப்படி கலந்து கொடுக்கலாம் என்று யோசித்தேன். அன்றைய தினம் இரவு 9 மணியளவில் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார் சுரேஷ். அவர் வரும்போது நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன். உடனே எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. என்னிடம் சண்டைப் போட்டுவிட்டு தூங்கச் சென்றார். நான்தான், ` வெறும் வயிற்றில் தூங்காதீர்கள், தோசை சுட்டுக் கொடுக்கிறேன்' என்று தெரிவித்தேன். ஆனால், போதையில் `வேண்டாம்' என்று அடம்பிடித்தார். பிறகு, ஆசையாக அவருக்கு இரண்டு தோசைகளை ஊட்டிவிட்டேன்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகளைக் கலந்தால் அதைச் சுடும்போது வீரியம் குறைந்துவிடும் என்று கருதினேன். இதனால் சுட்ட தோசையின் மீது பொடியாக தூக்கமாத்திரைகளைத் தூவினேன். அதைத்தான் அன்பாக சுரேஷுக்கு ஊட்டிவிட்டேன். தூக்க மாத்திரைகளைக் கலந்த தோசையைச் சாப்பிட்டதும் அவர் தூங்கச் சென்றுவிட்டார். அதன்பிறகு போனில் முரசொலிமாறனுக்கு தகவல் தெரிவித்தேன். அப்போது அவன், `வேலை இருக்கிறது, பிறகு வருகிறேன்' என்று கூறினான். உடனே நான், `முக்கியமான வேலை, உடனே புறப்பட்டு வா' என்று அன்புக் கட்டளையிட்டேன். இதையடுத்து, உடனே அவனும் வீட்டுக்கு வந்தான்.

முரசொலி மாறன்
முரசொலி மாறன்

அவனிடம் சுரேஷை கொலை செய்யப் போகும் தகவலைக் கூறினேன். அதற்கு அவன், `மாமா பாவம், விட்டுவிடு அக்கா' என்று கூறினான். உடனே நான், `உனக்கு ஒன்றும் தெரியாது. அவரால் தினமும் சித்ரவதை அனுபவிப்பதைவிட சாவதே மேல்' என்று அழுதபடி முரசொலி மாறனிடம் கூறினேன். மேலும், `சுரேஷ் கொலையை ஈஸியாக மறைத்துவிடலாம்' என்றும் அவனிடம் தெரிவித்தேன். இதனால், தூங்கிக்கொண்டிருந்த சுரேஷின் தொடையின் மீது ஏறி அமர்ந்த முரசொலி மாறன், இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார்.

அப்போது நான், துப்பட்டாவால் சுரேஷின் கழுத்தை இறுக்கினேன். இந்தச் சமயத்தில் சுரேஷ், எங்களோடு போராடினார். அவர் இறந்தபிறகு முரசொலி மாறன் புறப்பட்டுச் சென்றுவிட்டான். மகனோடு இரவில் தூங்கினேன். அதிகாலையில் சுரேஷ் வழக்கமாக வேலைக்குச் செல்வார். அதனால் அவரை எழுப்புவதைப் போலச் சென்று நாடகமாடினேன்.

சுரேஷ்
சுரேஷ்

அதன்பிறகு ஹவுஸ் ஓனருக்கு தகவல் தெரிவித்தேன். எல்லோரும் சுரேஷ், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக நம்பினர். நானும் கதறி அழுது மற்றவர்களை நம்பவைத்தேன். ஆனால் சுரேஷின் கழுத்தில் ஏற்பட்ட காயம், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றால் சிக்கிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சுரேஷ் கொலை வழக்கில் அனுப்பிரியா சிறைக்குச் சென்றுவிட்டார். இவர்களின் 4 வயது மகன் உறவினர் ஒருவர் வீட்டில் இருக்கிறான். `அப்பா, அம்மா எப்போது வருவார்கள்?' என்று அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.