Published:Updated:

‘போதையில் விபரீதம்; மூடிமறைத்த சகதொழிலாளர்கள்'- தொழிலாளி மரணத்தில் 13 நாள்களுக்குப் பிறகு அதிர்ச்சி!

அரக்கோணத்தில் காணாமல் போன ஆந்திரத் தொழிலாளி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவறிவிழுந்து உயிரிழந்த அவரது சடலத்தை சக தொழிலாளர்களே ஏரியில் புதைத்த சம்பவம், 13 நாள்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆதிநாராயணா அப்புடு
ஆதிநாராயணா அப்புடு

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் பொட்டவலசா பகுதியைச் சேர்ந்தவர், ஆதிநாராயணா அப்புடு (52). இவர் உள்பட அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 10 தொழிலாளர்கள், அரக்கோணத்தை அடுத்த இச்சிப்புத்தூரில் உள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில், கட்டட வேலைக்காக மூன்று மாதங்களுக்கு முன்பு வந்தனர்.

அரக்கோணம் ரயில் நிலையம்
அரக்கோணம் ரயில் நிலையம்

இவர்கள் அனைவரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வேலை செய்துவந்தனர். கடந்த மாதம் 29-ம் தேதி மாலை, ஆதிநாராயணா திடீரென மாயமானார். எங்கு சென்றார்... என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. அவருடன் தங்கியிருந்த சக தொழிலாளர்கள், சமீபத்தில் ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றுவந்தனர். 

அவர்களுடன் ஆதிநாராயணா வராததால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் எங்கே என்ற கேள்விக்கு, சக தொழிலாளர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினர். இதையடுத்து, ஆதிநாராயணாவை கண்டுபிடித்துத் தரக்கோரி அவரது குடும்பத்தினர், அரக்கோணம் தாலுகா போலீஸில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்தனர். 

ஆதிநாராயணா அப்புடு
ஆதிநாராயணா அப்புடு

இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகே, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ‘‘சம்பவத்தன்று இரவு, மது போதையில் இருந்த ஆதிநாராயணா, கல்வெட்டு மீது அமர்ந்திருந்தார். அங்கிருந்து தவறி விழுந்ததில் சுய நினைவு இழந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.

போலீஸுக்குப் பயந்து இச்சிப்புத்தூர் ஏரியில் சடலத்தைப் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டதாக’’ அவருடன் தங்கியிருந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஆதிநாராயணாவின் குடும்பத்தினரைப் போனில் தொடர்புகொண்டு சம்பவத்தை விவரித்தனர். 8 தொழிலாளர்களை, காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸார், சம்பவப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

சடலம்
சடலம்

அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலையில், ஏரியில் புதைக்கப்பட்டிருந்த ஆதிநாராயணாவின் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். 13 நாள்கள் ஆனதால், ஏரியிலேயே அரசு மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆதிநாராயணா இறந்ததை மறைத்துப் புதைத்த 8 தொழிலாளர்களைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.