Published:Updated:

சென்னை: குப்பை கொட்டுவதில் தகராறு! - சகோதரிகளை துப்பாக்கியால் சுட்ட இன்ஜினீயர்

இன்ஜினீயர் பயன்படுத்திய துப்பபாக்கி
இன்ஜினீயர் பயன்படுத்திய துப்பபாக்கி

சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இன்ஜினீயர், துப்பாக்கியை எடுத்து 4 ரவுண்ட் சுட்டுள்ளார்.

சென்னை ஐயப்பன்தாங்கல் ஆர்.ஆர் நகரில் வசிப்பவர் நாகேந்திரன் (27). இவர் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார். 2-வது தளத்தில் சாந்தி (42) என்பவர் குடியிருந்து வருகிறார். சாந்திக்கும் நாகேந்திரனுக்கும் குப்பை கொட்டுவதில் தொடங்கி தண்ணீர் பிடிப்பது வரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மோதல் சில நேரங்களில் வாய்த் தகராறாகவும் வெடித்து வந்துள்ளது.

துப்பாக்கி
துப்பாக்கி
மாதிரி படம்

சம்பவத்தன்று சாந்தி, தன்னுடைய வீட்டின் குப்பையை 2-வது தளத்திலிருந்து கீழே கொட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தக் குப்பை முதல் தளத்தில் குடியிருக்கும் நாகேந்திரனின் வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. அதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமரசப்படுத்தி வைத்துள்ளனர். சாந்தி, கிண்டியில் குரியர் நிறுவனம் நடத்திவருகிறார். அங்கு சென்ற அவர், தன்னுடைய சகோதரியிடம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தகராறைக் கூறியுள்ளார்

உடனே சாந்தியின் சகோதரி, `இந்தப் பிரச்னையை விட்டுவிட்டால் தொடர்ந்து நீடிக்கும். எனவே, சத்தம் போட்டு வைப்பது நல்லது' என்று சாந்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து நாகேந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகேந்திரன், தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை (ஏர்கன்) எடுத்து சாந்தியையும் அவரின் சகோதரியையும் மிரட்டியுள்ளார்.

எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையம்
எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் நிலையம்
சென்னை: `கொலைக்கு முன் மாமா ரூ.3,000 கொடுத்தார்' - பஞ்சாயத்துத் தலைவர் மருமகன் அதிர்ச்சித் தகவல்

இதனால் அதிர்ச்சிடைந்து சகோதரிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனாலும் நாகேந்திரன் விடாமல் அவர்களை விரட்டியதோடு மேலே பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்தனர். இதுகுறித்து போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் விசாரித்தனர். இதுதொடர்பாக சாந்தி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஜினீயர் நாகேந்திரனை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி குறித்து நாகேந்திரனிடம் போலீஸார் விசாரித்தபோது, `சார் இந்தத் துப்பாக்கியை ஆன் லைனில் வாங்கினேன். எனக்கும் சாந்திக்கும் நீண்ட நாள் பிரச்னை. அதனால் அவர்களைப் பயமுறுத்தவே துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டேன்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி போலீஸார் கூறுகையில், ``நாகேந்திரன் (28). சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பகுதியில் 4 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் நாகேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து 4 ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டுள்ளார். நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் உள்ளவர். அதற்காக விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தும் துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கி வைத்துள்ளார். இதில் உண்மையான தோட்டாவை பயன்படுத்த முடியாது. ரப்பர் தோட்டாவை பயன்படுத்தி சுட்டது தெரிய வந்துள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு