ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதிக்கு அருகே முட்புதரில் காயங்களுடன் ஆண், பெண் சடலங்கள் இருப்பதாக அந்தப் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அரக்கோணம் போலீஸார் உடலில் காயங்களோடு இருந்த இரண்டு சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து அரக்கோணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்த இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மாணிக்கம், அவர் மனைவி ராணி என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடன் கொடுத்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக ராணியின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் போலீஸாருக்குத் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மாணிக்கம் அவர் மகளின் திருமணச் செலவுக்காகத் தனியார் நிதி நிறுவனம் உட்பட பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார். சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திரும்பக் கேட்டு பிரச்னையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தத் தம்பதியினர் கடைசியாக தங்கள் மகளிடம் பேசும்போது, சோளிங்கரில் ஒருவரிடம் கடன் வாங்கச் செல்வதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், கடன் கொடுத்த யாரோ அவர்களை காரில் கடத்திக் கொலைசெய்துவிட்டு முட்புதரில் வீசிச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தாய், தந்தை இருவரும் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்ட அவர்களின் மகள் சசிகலா, மகன் பெருமாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொலையாளிகளைப் பிடிக்க தீவிரம்காட்டி வருகின்றனர்.