Published:Updated:

மிரட்டிய மணல் மாஃபியாக்கள், அதிகாலை ரெய்டு! - அதிரடி காட்டிய அறந்தாங்கி பெண் டிஎஸ்பி

மணிமாறன்.இரா
Vengadesh R

மணல் திருட்டில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து அவர்களது மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார் டி.எஸ்.பி.

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வெள்ளாற்றின் கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து, மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் தினமும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. நள்ளிரவில் தொடங்கி காலைப் பொழுது மணல் திருட்டு நடக்கிறது. அறந்தாங்கியைச் சுற்றியுள்ள அழியாநிலை, ஆளப்பிறந்தான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகள்

இந்தநிலையில், அறந்தாங்கி அருகே பொன்னம்பலம் வெள்ளாற்றுப் பகுதியில் ஏராளமான மாட்டு வண்டிகளில், சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக, அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு அதிகாலையிலேயே சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட 14 பேரையும் கைது செய்து, மணலுடன் 14 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார் டிஎஸ்பி கோகிலா. 14 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அறந்தாங்கியில் அவ்வப்போது, ஒன்றிரண்டு மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாட்டுவண்டிகள்
மாட்டுவண்டிகள்

தற்போது ஒரே நேரத்தில் 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக 5 கி.மீட்டர் தூரம் அறந்தாங்கி காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மணல் கொள்ளையர்களை விடுவிப்பதற்காக, அரசியல் கட்சியினரிடமிருந்து பல்வேறு அழைப்புகள் டி.எஸ்.பி-க்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாத டிஎஸ்பி அதிகாலையிலேயே சம்பவ இடத்துக்குச் சென்று அதிரடியாக மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்துள்ளார்.