Published:Updated:

ஆற்காடு: கொலையில் முடிந்த நெடுஞ்சாலை வழிப்பறி! - தற்காப்புக்குத் தாக்கிய லாரி ஓட்டுநர் கைது!

கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநர்
கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநர்

``லாரியை நிறுத்திவிட்டுத் தூங்கியபோது, இரண்டு இளைஞர்களும் கத்தியால் வெட்டி பணம் கேட்டனர். தற்காப்புக்காகத்தான் கத்தியைப் பிடுங்கி அவர்களைத் தாக்கினேன்’’ என்கிறார் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கானா, நாதமுனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரின் நண்பர் ஆற்காடு ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த அருண் (21). இருவரையும், ஆற்காடு அருகேயுள்ள வேப்பூர் பைபாஸ் சாலையில் லாரி ஓட்டுநர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில், மணிகண்டன் மரமணடைந்துவிட அருண் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெட்டுப்பட்ட இரண்டு பேரும் லாரியில் ஏறி தகராறில் ஈடுபட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

கன்டெய்னர் லாரி
கன்டெய்னர் லாரி

இதையடுத்து, அந்த நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து பேசப்பட்ட செல்போன் அழைப்புகளின் பட்டியலையும் போலீஸார் சேகரித்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம், விநாயகபுரம் தெருவைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் தென்னரசு என்பவரைப் பிடித்துவந்து விசாரித்துள்ளனர். போலீஸாரிடம் அவர், ``நான், வேப்பூர் பைபாஸ் சாலை சர்வீஸ் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன். நள்ளிரவு நேரத்தில், பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் லாரியில் ஏறி, கத்தியைக் காட்டி மிரட்டி 2,950 ரூபாயைப் பறித்துக்கொண்டனர். தொடர்ந்து, அங்கிருந்த இன்னொரு கன்டெய்னர் லாரி ஓட்டுநரையும் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றனர்.

அச்சமடைந்த நான், அங்கிருந்து எனது லாரியை ஓட்டிச் சென்றுவிட்டேன்’’ என தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், ஓட்டுநர் தென்னரசு கூறிய மற்றொரு கன்டெய்னர் லாரி, சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த லாரியின் ஓட்டுநர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, ராயப்பன்பட்டி ஓசனம் தெருவைச் சேர்ந்த ஜோஹன் பாஸ்கோ (36) என்பது தெரியவந்தது. கையில் அடிபட்டிருப்பதால் ஓட்டுநர் ஜோஹன் பாஸ்கோ, லாரி நிறுவனத்தில் விடுமுறை கேட்டு சொந்த ஊருக்குச் சென்றிருப்பதும் தெரியவந்தது. போலீஸாரும் தேனி மாவட்டத்துக்கு விரைந்து சென்று ஓட்டுநர் ஜோஹன் பாஸ்கோவைப் பிடித்து ஆற்காடு நகர காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநர்
கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநர்

விசாரணையில் அவர், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ``சம்பவத்தன்று நள்ளிரவு லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்களும் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், கத்தியால் வெட்ட முயன்றனர். என்னை தற்காத்துக்கொள்வதற்காகத்தான் கத்தியைப் பிடுங்கி அவர்களைத் தாக்கினேன். நிலைதடுமாறிய இரண்டு இளைஞர்களும் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். நானும் அங்கிருந்து லாரியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். இதில், வெட்டுக்காயம் ஏற்பட்ட இளைஞர் இறந்துவிடுவார் என நான் நினைக்கவில்லை’’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஓட்டுநர் ஜோஹன் பாஸ்கோ. இதையடுத்து, ஓட்டுநரைக் கைதுசெய்த போலீஸார்... அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வெட்டு வாங்கிய மணிகண்டனையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு