Published:Updated:

இரவு 9.05 முதல் அதிகாலை 3.32 வரை: நிர்பயா வழக்கில் அனல்பறந்த விவாதம்... முழு விவரம்!

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற கடைசி நிமிடம் வரையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களில் நடைபெற்ற `திக் திக்' வாதங்கள் என்ன?

ஏழு வருடங்கள், மூன்று மாதங்கள், நான்கு நாள்கள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இக்கொடூரத்தை அரங்கேற்றிய நான்கு குற்றவாளிகள், மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர். இக்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு விடிய விடிய நடைபெற்ற போராட்டமும், இறுதி நேரத்தில் அரசு தரப்பு எடுத்த நடவடிக்கைகளும் `திக் திக்' நிமிடங்கள்தான்.

நிர்பயா போராட்டம்
நிர்பயா போராட்டம்

டிசம்பர் 16, 2012-ல் டெல்லியைச் சேர்ந்த 23 வயது பிசியோதெரபி மாணவி ஒருவர் தனது நண்பருடன் இரவில் பஸ்ஸில் பயணம் செய்தபோது, ஆறு பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஓடும் பேருந்திலிருந்து வீசப்பட்ட இம்மாணவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், 13 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இக்கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `நிர்பயா’ எனப் பெயரிடப்பட்ட இம்மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் ஒரு சிறார் குற்றவாளி என ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சில மாதங்களிலேயே திஹார் சிறையில் ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார். மீதமிருந்த ஐந்து பேர் மீதும் வழக்கு நடைபெற்று, நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறார் குற்றவாளிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

உச்ச நீதிமன்றம் வரை சென்று, தூக்குத் தண்டனையை மாற்றியமைக்க குற்றவாளிகள் தரப்பு முயன்றும் முடியவில்லை. இவர்கள் நான்கு பேரும் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

நிர்பயா வழக்கு Timeline
நிர்பயா வழக்கு Timeline

மூன்று முறை தூக்குத் தண்டனை தேதி மாற்றியமைக்கப்பட்டு, இறுதியாக மார்ச் 20-ம் தேதி காலை 5:30 மணிக்கு இவர்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களைக் காப்பாற்றும் பொருட்டு டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் கடைசி முயற்சியாக விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டமும் அதை அரசுத் தரப்பு உடைத்த விதமும் `திக் திக்' நிமிடங்கள்தான். அந்த சுவாரஸ்ய வழக்கு வாதங்கள் இங்கே...

மார்ச் 19, இரவு 9:05 மணி, டெல்லி உயர் நீதிமன்றம்: நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்திவைக்குமாறு அவசர வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், திஹார் ஜெயிலின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, நிர்பயா பெற்றோரும் அவர்களின் வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள்.

இரவு 10:10 மணி: நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருல்லா ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

நீதிபதி மன்மோகன்: என்ன வழக்கு தாக்கல் செய்துள்ளீர்கள்? முறையான ஆவணங்கள், இணைப்புகள் இல்லை. இதைத் தாக்கல் செய்ய ரிஜிஸ்திராரிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா?

அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா: பவன் மற்றும் மற்றவர்கள் என்கிற தலைப்பில்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யார், என்ன கோரிக்கை போன்ற விவரங்கள் வழக்கு மனுவில் இல்லை. இதை எப்படி விசாரணைக்கு ஏற்பது?

குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங்: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சார்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பீஹார் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனாதிபதியிடம் ஒரு கருணை மனு நிலுவையில் உள்ளது. ஆக, இந்த விசாரணை குறித்து அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்கும்போது, எப்படி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியும்?

வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா: இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லக்கூடாது. நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்னதாக குற்றவாளிகள் ஒருநபரிடம் இருந்து கொள்ளையடித்துள்ளனர். அதுகுறித்த எஃப்.ஐ.ஆர் தனியாக இன்றும் விசாரிக்கப்படுகிறது. அதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க முடியுமா? அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையை கருத்தில்கொண்டு, அவர்களுக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

வழக்கறிஞர் ஏ.பி.சிங்: குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம் சிங் எந்தக் குற்றமும் புரியவில்லை. முன்னால் திஹார் ஜெயில் ஜெயிலர் சுனில் குப்தா எழுதியுள்ள `ப்ளாக் வாரண்ட்’ புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி மன்மோகன்: நானும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு எதைவேண்டுமானாலும் எழுதலாம். இந்தப் புத்தகத்தை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போல மேற்கோள் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது மிஸ்டர் சிங். உங்களுக்கு நேரமில்லை என்பது புரிகிறதா. கடைசி நேரத்தில் எந்த முயற்சியும் பலனளிக்காது. உங்கள் கட்சிக்காரர்கள் கடவுளை சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

வழக்கறிஞர் ஏ.பி.சிங்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக என்னால் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நகல் எடுக்க முடியவில்லை. இரண்டு நாள்கள் அவகாசம் தாருங்கள். அதுவரை தண்டனையை நிறுத்திவையுங்கள்.

நீதிபதி மன்மோகன்: உங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைக்க முடியாது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துவிட்டது. அதை மாற்றியமைக்கக் கோருகிறீர்களா? இரண்டரை வருடமாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? நான்காவது முறையாக தூக்குத் தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் எதுவும் செய்ய முடியாது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா: நான்கு பேரின் உயிர் சம்பந்தப்பட்டு இருப்பதால்தான் இவ்வழக்கை இன்றிரவிலும் விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுள்ளது. ஆனால், விசாரிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். இவர்கள் நேரத்தை கடத்துவதற்காக வீண் விவாதம் செய்கிறார்கள்.

குற்றவாளிகள் தரப்பின் மற்றொரு வழக்கறிஞர் ஷாம்ஸ் குவாஜா: ``பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு கருணைகாட்ட முடியாது” என்று டிசம்பர் 2019-ல் ஜனாதிபதி கூறியதாக மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. தன் முன்னால் கருணை மனு நிலுவையில் இருக்கும்போது, வெளிப்படையாக ஜனாதிபதி இப்படி பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகளின் உரிமைகள் மதிக்கப்படவில்லை.

நீதிபதி மன்மோகன்: இதையெல்லாம் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள்? இன்னும் ஆறு மணிநேரத்தில் உங்கள் கட்சிக்காரர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

மார்ச் 19, இரவு 11:40 மணி: அவசர வழக்கின் வாதங்கள் முடிவுற்றன. நீதிபதிகள் தீர்ப்பை எழுதத் தொடங்குகிறார்கள்.

மார்ச் 19, நள்ளிரவு 12:06 மணி: 'குற்றவாளிகள் தரப்பு தாக்கல் செய்த மனுவில் எந்தத் தகவலும் ஆவணங்களும் இணைக்கப்படவில்லை. இம்மனுவைத் தள்ளுபடிசெய்கிறோம்' என நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருல்லா இருவரும் அறிவித்தனர்.

டெல்லி உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைக் குற்றவாளிகள் தரப்பு தட்டியது. தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், ̀̀இவர்கள் அனைவரும் அப்பாவிகள். அவர்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. அவர்கள் நிரபராதிகள் என்பதை நான் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்” என்றார்.

ஏ.பி.சிங்
ஏ.பி.சிங்

உச்ச நீதிமன்றப் பதிவாளரின் வீட்டிற்கே சென்று தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு ஏ.பி.சிங் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அமர்வு முன்பு இவ்வழக்கு மார்ச் 20-ம் தேதி அதிகாலை 2:43 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன்: மிஸ்டர் ஏ.பி.சிங், நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தையும் ஏற்கெனவே பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை வைத்துவீட்டீர்கள். புதிதாக என்ன சொல்லப்போகிறீர்கள்?

வழக்கறிஞர் ஏ.பி.சிங்: குற்றம் நடந்தபோது பவன்குப்தா ஒரு சிறுவன். இதை அரசுத் தரப்பு கருத்தில் கொள்ளவில்லை.

நீதிபதி பானுமதி: இந்த வாதம் ஏற்கெனவே நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தவரை முயற்சித்துவிட்டீர்கள் மிஸ்டர் சிங். இப்போது நாங்கள் தீர்ப்பளிக்கப்போகிறோம்.

அதிகாலை 3:32 மணி: நான்கு குற்றவாளிகளின் கோரிக்கை மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. இதன் தொடர்ச்சியாக காலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

சரியாக அதிகாலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு முன்னதாக, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக, குற்றவாளி முகேஷ் எழுதிக் கொடுத்தார். தான் வரைந்த ஓவியங்களில் அனுமன் மந்திரம் ஓவியத்தை சிறைக் கண்காணிப்பாளருக்கும் மற்றொரு ஓவியத்தை தன் குடும்பத்திற்கும் அளிப்பதாக வினய் குமார் கூறினார். பவன் குப்தா, அக்‌ஷய் குமார் இருவரும் எந்த கடைசி ஆசையையும் கூறாமலேயே தூக்கு மேடை ஏறினர். குற்றவாளிகளின் உடல்கள் அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகளுடன் அவரவர் ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கிற்கு யார் ஊதியம் தருவது, உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடுவதற்கு குற்றவாளிகளுக்கு எங்கேயிருந்து பணம் வந்தது என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். ̀ ̀̀̀̀எல்லா வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் பணத்திற்காக வாதாடுவதில்லை. சிலர் புகழுக்காகவும் பெயருக்காகவும் வாதாடுவார்கள். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகியதால் ஏ.பி.சிங்கிற்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துள்ளது. தன் கட்சிக்காரர்களைக் காப்பாற்ற நள்ளிரவிலும் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுவார் என குற்றவாளிகளிடம் பிரபலமடைந்துவிட்டார். இதுதான் அவருக்கு மூலதனம். இதைவைத்து உச்ச நீதிமன்றத்தில் பெரிய வக்கீலாக அவர் உருவெடுத்துவிட்டார். இவருக்கான ஊதியத்தை தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடும் சில என்.ஜி.ஓ-க்களும் அளித்துள்ளன” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு