Published:Updated:

`காட்டுப்பகுதியில் மதுகுடிக்கும் மாணவிகள்!'- அரியலூர் சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்கள்

மதுபானம் குடிக்கும் மாணவிகள்
மதுபானம் குடிக்கும் மாணவிகள்

`பள்ளிகள் மற்றும் கோயில்களின் அருகில் மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, யாரும் குடிக்காதீர்கள் என்று தமிழக அரசு சொன்னால் மட்டும் போதுமா?'

அரியலூரில் பள்ளி மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. `பாடப் புத்தகத்தைத் தூக்க வேண்டிய மாணவிகள், இன்று மது பாட்டிலை தூக்குகிறார்கள் என்றால், இதற்கு அரசுதான் காரணம்' என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மதுபானம் குடிக்கும் மாணவிகள்
மதுபானம் குடிக்கும் மாணவிகள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு மூவர் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு மதுபானத்தை குடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

எவ்வளவுதான் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பள்ளி மாணவர்கள் வரையில் மதுவுக்கு அடிமையாகும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இதற்குப் பள்ளி மாணவ-மாணவிகள் மது குடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவருவதை ஆதாரமாகக் கூறலாம். பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது. `இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வெள்ளை அறிக்கை விடவேண்டும். இச்சம்பவத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
சண்முக சுந்தரம், மக்கள் சேவை இயக்கம்
மாணவிகள்
மாணவிகள்

இதுகுறித்து அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் பேசினோம். ``அய்யயோ எங்க மாவட்டத்தில் இது மாதிரி நடந்திருக்கா என்ன? என்று நம்மிடம் முழுமையாகக் கேட்டார். நாமும் முழுத் தகவலையும் சொல்லிய பின்பு, `அந்த வீடியோவை எங்களுக்கு அனுப்புங்கள் பார்ப்போம்' என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.

சமூக ஆர்வலரும் மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் சண்முக சுந்தரத்திடம் பேசினோம். ``பாடப் புத்தகத்தைத் தூக்க வேண்டிய பெண்கள் இன்று மது பாட்டிலை தூக்குகிறார்கள் என்றால் இதற்கு யார் காரணம்?

தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்
தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்

தமிழக அரசுதான் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், இன்று, `அம்மாவின் ஆட்சியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்' என்று மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி அரசு சத்தமே இல்லாமல் 2000- க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகளைப் புதிதாகத் திறந்திருக்கிறது.

இது வெட்கப்பட வேண்டிய சம்பவம் அல்லவா? அத்தோடு பள்ளி மாணவிகள் குடிப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு கோயமுத்தூர், சேலம், சென்னை, தற்பொழுது அரியலூர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசும் கண்டும் காணாமல் மவுனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது.

Representational Image
Representational Image

அதேபோல், பள்ளிகள் மற்றும் கோயில்களின் அருகில் மதுக்கடை திறந்து வைத்துவிட்டு யாரும் குடிக்காதீர்கள் என்று தமிழக அரசு சொன்னால் போதுமா? அதைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வெள்ளை அறிக்கை விடவேண்டும். இச்சம்பவத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

பள்ளி மாணவ- மாணவிகளிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண் குடித்தால் அவனோடு போகும். ஆனால், ஒரு பெண் குடிக்க ஆரம்பித்தால் அந்தக் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் என்பதை ஒவ்வொரு பள்ளியிலும் எடுத்துச்சொல்ல வேண்டும்" என்று காட்டத்தோடு முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு