Published:Updated:

`கழிவறையைச் சுத்தம் செய்யச் சொன்னார்கள்?' -பள்ளி நிர்வாகத்தால் விபரீத முடிவெடுத்த அரியலூர் மாணவி

மாணவி ரேகாவின் பெற்றோர்
மாணவி ரேகாவின் பெற்றோர்

பள்ளி நிர்வாகத்தின் கொடுமையின் காரணமாக தங்கள் மகள் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள் அவரது பெற்றோர்.

அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் ரேகா, திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அடுத்த வடுகர்பேட்டை கிராமத்தில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த இவரை, கடந்த பிப்ரவரி 19ம் தேதி மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் ரேகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தது.

மாணவி
மாணவி

இதையடுத்து வடுகர்பேட்டைக்கு விரைந்து வந்த மாணவி ரேகாவின் தந்தை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் ரேகா குறித்து தகவல் கிடைக்கவில்லை. அதையடுத்து அவர்கள் கல்லக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், வடுகர்பேட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் ரேகா உடல் சிதறிப் பிணமாகக் கிடப்பதாகவும் அவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாகக் கல்லக்குடி போலீஸார் மற்றும் அரியலூர் மாவட்ட ரயில்வே போலீஸாரும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடுகர்பேட்டையில் உள்ள பள்ளியின் முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ரேகாவின் உறவினர்கள், விடுதியில் தங்கியிருந்த ரேகா எப்படி வெளியேறினார். அதற்கான காரணம் என்ன, மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கல்லக்குடிக் காவல்நிலையம்
கல்லக்குடிக் காவல்நிலையம்

திடீர்ப் போராட்டம் குறித்து தகவலறிந்த கல்லக்குடி காவல்நிலைய போலீஸார் அங்குவந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடையவே, அவர்களை கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து லால்குடி டி.எஸ்.பி ராஜசேகர் தலைமையிலான போலீஸார் கைது செய்யப்பட்ட 200 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக 10 நாள்களில் உரிய விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றதைப் போராட்டக்காரர்கள் ஏற்றனர்.

மாணவியின் தற்கொலை தொடர்பாகப் பேசிய நடராஜன், ``என் மகளைப் பள்ளி விடுதி நிர்வாகம் கொடுமை செய்துள்ளனர். விடுதியில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும், விடுதிகளைக் கூட்டிப்பெருக்க வேண்டும் உள்ளிட்ட வேலைகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். இதனால் மனம் வேதனையடைந்த என் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல்கள் தற்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது. அதனால் இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

`பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷம் எதிலும் கிடைக்காது!’ -  அசத்தும் `சாக்ஸபோன்’ ஏஞ்சல் மோனிகா

பள்ளி நிர்வாகமோ, ``மாணவி காணாமல் போனவுடன் அதுகுறித்த தகவலை அவரது அண்ணனுக்குத் தெரிவித்தோம். இந்நிலையில் ரேகா இறந்து 20 நாள்களுக்குப் பிறகு இவர்கள் போராடுகிறார்கள். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி சந்திப்போம்” என்றார்கள். மாணவியின் மரணம் திருச்சி லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு