Published:Updated:

`2 ஆண்டுகளுக்கு முன் தோழியைக் கொன்ற ஜெயங்கொண்டம் பெண்!'- ஆண் நண்பருடன் சிக்கிய பின்னணி

`பணம் வசூல் செஞ்சிட்டு வந்து கொடுக்கிறதால. நீங்கள் பணம் கொடுக்கச் சொல்கிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கணுமானு' ஜெயந்தியை உறவினர் முன்னிலையில் மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார்.

திட்டம் திட்டிய  ஜெயந்தி
திட்டம் திட்டிய ஜெயந்தி

ஆண் நண்பருடன் சேர்ந்து நகை மற்றும் பணத்துக்காகத் தோழியைக் கொலை செய்துவிட்டு, போலீஸார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று வேவு பார்த்த பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலக்கி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுதா குடும்பத்தினர்
சுதா குடும்பத்தினர்

ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுதா, மகன் ஆதித்தியன், மகள் ஆர்த்தி ஆகியோருடன் வசித்துவந்தார். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சுதாவை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 15 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அப்போதைய எஸ்.பி. அபிநவ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடிவந்த நிலையில், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

கொலை நடந்து 2 வருடங்கள் நெருங்கிய நிலையில், தற்போதைய எஸ்.பி சீனிவாசன் இவ்வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். தீவிர விசாரணையில் தனிப்படையினர் ஈடுபட்டனர். அப்போது சுதா வீட்டின் எதிரே குடியிருந்து வந்து தற்பொழுது அதேபகுதியில் வேறு இடத்தில் வசித்துவரும் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி மீது சந்தேகப்பட்டு விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

மேலும், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் சின்ராசு என்ற வாலிபரின் துணையுடன் சுதாவைக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 15 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இருவரிடமிருந்தும் 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு பதிந்து ஜெயந்தியை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

ஜெயந்தி
ஜெயந்தி

போலீஸாரிடம் ஜெயந்தி, ``சுதாவும், நானும் இணைபிரியாத தோழிகள். கணவருக்குத் தெரியாமல் சுதா வட்டித் தொழில் செய்துவந்தார். வட்டிப் பணத்தை நான் வசூல்செய்து கொடுத்தேன். எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சின்ராசுடன் சேர்ந்து சுதாவைக் கொன்றுவிட்டு வேறுஇடத்துக்குச் சென்றுவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினரிடம் பேசினோம். ``இருவருக்குள் கொடுக்கல் வாங்கல் விவகாரம்தான் கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது. ஜெயந்தியும் சுதாவும் அக்கம்பக்கத்து வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். இருவரது வீட்டில் நல்ல காரியம் நடந்தாலும் ஒருவருக்கொருவர் இல்லாமல் எந்தக் காரியமும் நடக்காது. அந்த அளவுக்குத் தோழிகளாகப் பழகி வந்திருக்கிறார்கள். அத்தோடு கணவன் கொடுக்கும் பணத்தை அவருக்குத் தெரியாமல் அதிக வட்டிக்குப் பணம் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார் சுதா.

வட்டிப் பணத்தை வசூல் செய்யும் வேலையை ஜெயந்தி பார்த்திருக்கிறார். இந்த நிலையில், ஜெயந்தியின் உறவினருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் அவரை அழைத்து வந்து சுதாவிடம் பணம் கேட்டிருக்கிறார்.

பணம் வசூல் செஞ்சிட்டு வந்து கொடுக்கிறதால நீங்கள் பணம் கொடுக்கச் சொல்கிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கணுமானு ஜெயந்தியை உறவினர் முன்னிலையில் மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார் சுதா. அந்த ஆத்திரத்தில் அவரிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தைத் திருட ஐந்தாறு முறை முயற்சி செய்திருக்கிறார். எதுவும் முடியவில்லை. அப்பொழுது ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு பழக்கமாகியுள்ளார்.

சின்ராசு
சின்ராசு

அப்போது சுதா என்னிடம் ஐந்து லட்ச ரூபாய் அளவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு தரமறுக்கிறாள். பணத்தைக் கேட்டால் உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று மிரட்டுகிறார். அவளிடமிருந்து எப்படியாவது பணத்தையும் நகையையும் எடுக்க வேண்டும் என்று சின்ராசுவிடம் மாற்றிக் கூறியிருக்கிறார்.

சின்ராசுவும் ஜெயந்தியின் பழக்கம் வேண்டும் என்பதற்காக இரவோடு இரவாகச் சுதாவைக் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு நகையையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.

திட்டம் திட்டிய  ஜெயந்தி
திட்டம் திட்டிய ஜெயந்தி

அத்தோடு ஜெயந்தி காவல்துறையில் உள்ள அதிகாரியைக் கையில் வைத்துக்கொண்டு போலீஸார் எப்படி விசாரிக்கிறார்கள். யார் பக்கம் போலீஸாரின் கவனம் திரும்புகிறது என்றெல்லாம் விசாரித்துக்கொண்டே இருந்திருக்கிறார். இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் எங்கள் ஆய்வாளர், ஜெயந்தியை அழைத்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கிறார். பின்பு எங்களுடைய பாணியில் விசாரணை செய்ததில் அனைத்தையும் சொல்லிவிட்டார்" என்றனர்.