குடும்பப் பிரச்னையால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்சார டிரான்ஸ்ஃபாமரில் ஏறி ராணுவ வீரர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்த சக்தி என்பவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன், மோனிஷா என்பவருடன் இவருக்குத் திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பின், மனைவி மோனிஷாவுக்கும் சக்தி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டு நாள்களுக்குமுன் சக்தி ஊருக்கு வந்தபோது, மோனிஷா தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கை காவல்துறை விசாரித்துவந்த நிலையில், ஆர்.டி.ஓ விசாரணைக்காக நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு சக்தியின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
குடும்பப் பிரச்னை, மனைவி தற்கொலை, விசாரணை என மனவிரக்தியில் இருந்த சக்தி, திடீரென்று டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவருடன் வந்தவர்களும் அப்பகுதியில் இருந்தவர்களும் அவரை அங்கிருந்து இறங்கும்படி கேட்டும் இறங்கவில்லை. சிறிது நேரத்தில், அங்கிருந்த மின் கம்பியில் கைபட்டு தூக்கி வீசப்பட்டார்.

உடனே அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். தற்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.