Published:Updated:

வேலூர்: தூக்கில் ராணுவ வீரர்; கட்டிலில் கர்ப்பிணி மனைவி! - லாட்ஜ் அறையில் அதிர்ச்சி

மணக்கோலத்தில் புருஷோத்தமன் - அமுலு
மணக்கோலத்தில் புருஷோத்தமன் - அமுலு

லாட்ஜ் அறையில் ராணுவ வீரரும், அவரது கர்ப்பிணி மனைவியும் சடலமாகக் கிடந்த சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (35), ராணுவ வீரர். இவருடைய மனைவி அமுலு (26). இந்தத் தம்பதியருக்கு 2016-ல் திருமணம் நடைபெற்றது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம்தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அமுலு. இந்தநிலையில், தந்தை ஆறுமுகத்துக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார் புருஷோத்தமன்.

சி.எம்.சி மருத்துவமனை
சி.எம்.சி மருத்துவமனை

சிகிச்சைக்காக, சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் தந்தையை அனுமதித்துவிட்டு, அவரை கவனித்துக்கொள்வதற்காக அருகிலுள்ள லாட்ஜில் அறை எடுத்து மனைவியுடன் தங்கினார். புருஷோத்தமனைப் பார்ப்பதற்காக அவருடைய அண்ணன் ராஜ்குமார் நேற்று லாட்ஜுக்கு வந்தார். அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால், புருஷோத்தமனின் செல் நம்பருக்கு போன் செய்திருக்கிறார் அவருடைய அண்ணன்.

நீண்டநேரமாக `ரிங்’ அடித்தும், போன் எடுக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அண்ணன் ராஜ்குமார், லாட்ஜ் மேலாளரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது, புருஷோத்தமன் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவருடைய மனைவி அமுலு கட்டில்மீதும் சடலமாகவும் கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர். தகவல் அறிந்ததும், வேலூர் வடக்கு போலீஸார் லாட்ஜுக்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மணக்கோலத்தில் புருஷோத்தமன் - அமுலு
மணக்கோலத்தில் புருஷோத்தமன் - அமுலு

மேலும், வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். அமுலுவின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் இருந்ததால், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, ராணுவ வீரர் புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதும் போலீஸார் அதற்கான காரணம் குறித்தும் அலசி ஆராய்ந்துவருகிறார்கள். இந்தச் சம்பவம், புருஷோத்தமன் மற்றும் அமுலுவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு