Published:Updated:

பக்கா பிளானிங்... மரத்தில் கயிறுகட்டி கோயிலில் கொள்ளை... வெளியான சிசிடிவி காட்சிகள்!

கோயில்
கோயில்

கடந்த 4-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல், இரண்டு உண்டியல்களை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. திட்டமிட்டு செயல்பட்டுள்ள திருடர்கள், சத்தமே இல்லாமல் உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு உள்ள இந்தச் சமயத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பழைமை வாய்ந்த ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்து கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இந்தக் கோயிலில், கடந்த 4-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல், கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோயிலுக்குள் ஆள்கள் இருந்தபோதிலும், திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

உண்டியல்
உண்டியல்

இதுதொடர்பாக, கோயில் அர்ச்சகர் ரங்கநாத பட்டாட்சியாரிடம் பேசினோம்.

“இந்தச் சம்பவம் 4-ம் தேதி இரவு சுமார் 12.30 மணிக்கு மேல் நடந்துள்ளது. கோயில், காலை 6 மணி முதல் இரவு 7.30 மணிவரை திறந்திருக்கும். அப்போது, ஆறுகால பூஜைகள் நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 144 தடை இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் வருவதில்லை. அதனால் ஆராதனை முடிந்தவுடன் கோயில் கதவை பூட்டிவிட்டு வெளியே வந்துவிடுவோம். ராஜகோபுரத்தின் அருகே உள்ள வாகன மண்டபத்தில் படுத்துக்கொள்வோம். நாங்கள் எப்பவுமே 11 மணிவரை சுற்றிப் பார்த்துவிட்டுதான் படுப்போம். அன்றும் அதேபோல் பார்த்துவிட்டுதான் படுத்தோம். ஆனால், திருடர்கள் இரவு 12.30 மணிக்குமேல் வந்துள்ளனர்.

கோயிலுக்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் கயிற்றைக் கட்டி, 20 அடி உயரம் கொண்ட பெரிய மதில் சுவரைக் கடந்து உள்ளே இறங்கியுள்ளனர். பின் உட்புறப் பிரகாரத்துக்கு தடுப்புக் கட்டைகளை அடுக்கி இறங்கியுள்ளனர். உள்ளே இருந்த உண்டியலின் பூட்டை சத்தமே இல்லாமல் உடைத்து, பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அலாரம் சிஸ்டமும் பழுதாகி இயங்காமல் இருந்தது. வழக்கமாக நாங்கள் பூஜை செய்வதற்காக காலை 5 மணிக்கு கோயிலைத் திறப்போம். அதற்கு முன்பாக இரவுக் காவலர் ஒருவர் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவருவார். அப்படி அவர் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வந்து எங்களிடம் கூறினார்.

திருடன்
திருடன்

பின்னர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். பின்னர், சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது 3 பேர் ஆயுதங்களுடன் உள்ளே இறங்கி வந்துள்ளனர். ஒருவன் கைலி, மற்றொருவன் வேட்டி, இன்னொருவன் பேன்ட் அணிந்திருந்தான். எங்கே சத்தம் கேட்டு நாங்கள் உள்ளே வந்துவிடுவோமோ என்பதற்காக கதவு அருகே இரண்டு பேரை பயங்கரமான ஆயுதங்களுடன் நிற்க வைத்துவிட்டு ஒருவனே பூட்டை உடைத்துள்ளான். அன்று, நாங்கள் யாரேனும் உள்ளே சென்றிருந்தாலும் எங்களில் யாருக்காவது உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

'இந்தத் திருட்டு எல்லாம் இங்க சர்வசாதாரணம்!' 😂😂😂 ரக மோசடிகள்

ஜனவரி மாத இறுதியில்தான், உண்டியலில் இருந்த காசுகளை எடுத்தோம். தற்போது இரண்டரை மாதங்கள்தான் ஆகின்றன. பள்ளித் தேர்வுகள் இருந்ததாலும், தற்போது கொரோனா நோய் பாதிப்பு மக்களை வாட்டிவருவதாலும், கோயிலுக்கு மக்கள் வருவதில்லை. இரண்டு உண்டியலிலும் சேர்த்து சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மணலூர்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். சிசிடிவி கேமரா சற்று தெளிவற்று இருந்ததால், அதிக திறன் கொண்ட கேமராவைப் பொருத்துவதற்கும், கயிறு கட்டி ஏறுவதற்குப் பயன்பட்ட வேப்பமரத்தை வெட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அந்தத் திருடர்களின் மனங்களை இறைவன் மாற்றினால் நன்றாக இருக்கும்” என்றார் அவர்.

கோயில்
கோயில்

கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பழமை வாய்ந்த ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்...

Posted by Junior Vikatan on Tuesday, April 7, 2020

இந்தச் சம்பவம் குறித்து, மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினோம்.

“உண்டியல் பணம் கொள்ளைபோனது தொடர்பாக விசாரித்து வருகிறோம். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தகவல் கிடைத்தால் கட்டாயம் தெரிவிப்போம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு