Published:Updated:

`சட்டத்துக்கு உட்பட்டே கைது!’ - ராஜ் குந்த்ரா மனுவைத் தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

ராஜ் குந்த்ரா
ராஜ் குந்த்ரா

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தன்னை சட்டவிரோதமாகக் கைதுசெய்திருப்பதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து, மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த வழக்கில் மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் தனது மொபைல் ஆப்களில் இருக்கும் வீடியோக்களைப் போன்ற வீடியோக்கள் அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே, தன்னைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த சில நாள்களாக நீதிபதி அஜய் கட்கரி முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ராஜ் குந்த்ராவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததோடு சட்டத்துக்கு உட்பட்டே ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ராஜ் குந்த்ரா
ராஜ் குந்த்ரா

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா பாய் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், `போலீஸார் ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தில் சோதனையிடுவதற்காகச் சென்றபோது ராஜ் குந்த்ரா தனது வாட்ஸ்அப்பில் இருந்த உரையாடல்களை அழித்துக்கொண்டிருந்தார். எனவே சாட்சியங்களை அழித்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

`இதற்கு முன்பு கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், போலீஸார் சோதனை நடத்தியபோதும் அல்லது போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கேட்டபோதும் போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராஜ் குந்த்ரா சாட்சிகளை அழிக்க முயன்றது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று ராஜ் குந்த்ரா சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

"அவை ஆபாச வீடியோக்கள் அல்ல!"- கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா, `ராஜ் குந்த்ராவின் மொபைல் ஆப்களில் இருந்து அதிகப்படியான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 41ஏ சட்டப் பிரிவின் கீழ் போலீஸார் ராஜ் குந்த்ரா, ரேயான் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ரேயான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் ராஜ் குந்த்ரா அதை ஏற்கவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால்தான் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்’ என்று தெரிவித்தார். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி 41 ஏ சட்டப்பிரிவின் கீழ் அதிகபட்சமாகக் குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். ராஜ் குந்த்ரா சார்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு