Published:Updated:

எஸ்.எஸ்.ஐ கொலை: `திருட்டு வழக்குக்குப் பயந்து கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார்கள்!’ - நடந்தது என்ன?

பூமிநாதன், அவர்கள் ஆட்டைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை டூவிலரில் துரத்திச்சென்றிருக்கிறார்.

எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை எதற்காக கொலை செய்தோம் என்பது குறித்து கைதான மணிகண்டன் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருகிறார்.

எஸ்.எஸ்.ஐ பூமிநாதன்
எஸ்.எஸ்.ஐ பூமிநாதன்

திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் ஆடு திருடர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 19 வயது இளைஞர், இளம் சிறார்கள் இரண்டு பேர் உட்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வரும் போலீஸாரிடம் இது தொடர்பாக விசாரித்தோம். ``இந்த வழக்கில் கைதான மணிகண்டனும், இரண்டு சிறார்களும் ஆடுகளைத் திருடி விற்பனை செய்வதை வழக்கமாகக் வைத்திருந்திருக்கிறார்கள். திருவெறும்பூர், முசிறி, துறையூர் பகுதிகளில் சாலைகளில் திரியும் ஆடுகளைக் கடத்தி வந்து சமயபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

போலீஸார்
போலீஸார்

அதேபோல, மற்ற நாள்களில் திருடும் ஆடுகளை உள்ளூரிலிருக்கும் இறைச்சிக் கடைகளில் விற்று வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், மணிகண்டனின் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்குச் செல்ல, கையில் செலவுக்குப் பணம் இல்லாததால் ஒரு ஆட்டை திருடியிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைக்காரரிடம் விற்பனை செய்வதற்காக பைக்கில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் ஆடு கத்தாமல் இருக்க வாயில் துணியைக்கொண்டு கட்டி எடுத்து வந்திருக்கின்றனர். அதைக் கண்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் டூவீலர்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.

பூமிநாதன் குடும்பத்தினர்
பூமிநாதன் குடும்பத்தினர்

அதையடுத்து, பூமிநாதன், அவர்கள் ஆட்டைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை டூவிலரில் துரத்திச்சென்றிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்துக்குச் சென்றபோது மடக்கிப்பிடித்து, இளம்சிறார்களின் குடும்பத்தாரிடம் பூமிநாதன் பேசியிருக்கிறார்.

பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் போலீஸார்
பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் போலீஸார்

அதன் பிறகு அவர் கீரனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததும், போலீஸார் சம்பவ இடத்துக்கு வர இருந்த நேரத்தில், திருட்டு வழக்கில் போலீஸாரிடம் சிக்கிவிடக்கூடாது என்கிற பயத்தில் அவரை தாக்கிவிட்டுத் தப்பிவிடலாம் என்று அவரை பின் பக்கத்திலிருந்து தாக்கிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். பின்பக்கம் தான் வெட்டியிருக்கிறார்கள் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெளிவாக உள்ளது. அவர்கள் திருட்டு வழக்கிற்குப் பயந்து இன்று கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார்கள்" என்றனர் போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு