Published:Updated:

`6 தலைமுறையா இருக்கோம்; சாதிக் கொடுமைல இருந்து தப்பிக்க முடியலை' - கலங்கும் தீயத்தூர் மக்கள்

காளிகோயில்ல இருக்க சாம்பவமூர்த்தி சந்நிதியில் மட்டும்தான் சாமி கும்பிட எங்களுக்கு அனுமதி. அந்தக் கோயில்ல நாங்க பரம்பரை பூசாரிங்கிறதாலதான் அந்த அனுமதியும் கொடுத்திருக்காங்க.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தீண்டாமைக் கொடுமை காரணமாக, பட்டியலினப் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாற்றுச் சாதியினருடன் காவல்துறையும் சேர்ந்துகொண்டு அதைத் தற்கொலை என மாற்றும் முயற்சி நடக்கிறது. சாதியக் கொடுமையிலிருந்து மீள, நாங்கள் மதம் மாறுவதற்கு முடிவு செய்திருக்கிறோம்” என நம்மிடம் வேதனை கலந்த குரலில் தொடர்புகொண்டு பேசினார் ஒருவர். அவரிடம் முகவரியைப் பெற்றுக்கொண்டு விரைந்தோம். அவர் அனுப்பிய முகவரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே, மாவட்டத்தின் கடைக்கோடியிலிருக்கும் தீயத்தூர் கிராமம். ஊரில் நுழைந்து சிறிது தூரம் சென்றதும் பாதுகாப்புக்காக போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அங்கிருந்து இரு சக்கர வாகனம்கூட செல்ல முடியாத ஒற்றையடிப் பாதையாக இருந்தது. அங்கிருந்த பட்டியலின மக்களின் வீடுகளும் தீப்பெட்டியை அடுக்கிவைத்ததுபோல அருகருகே இருந்தன. செல்போன் அழைப்பு வந்தது அங்கிருந்துதான். அங்கிருந்த மக்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

பாதை
பாதை
விழுப்புரம்: `உள் ஏலம்... சாதியப் பாகுபாடு?!’ - தொடரும் மணக்குப்பம் ஊராட்சி ஏரி மீன் ஏல சர்ச்சை

``கிட்டத்தட்ட ஆறு தலைமுறையாக இந்த ஊர்லதான் குடியிருக்கோம். நாய்க்கு இருக்குற மரியாதைகூட எங்களுக்கு இல்லீங்க’’ என்று வேதனையுடன் பேச்சைத் தொடங்கினார், கிருஷ்ணன். ``காளி கோயில், சிவன் கோயில், விநாயகர் கோயில்ன்னு ஊர்ல மொத்தம் அஞ்சு கோயில் இருக்கு. இதுல, காளிகோயில்ல இருக்க சாம்பவமூர்த்தி சந்நிதியில் மட்டும்தான் சாமி கும்பிட எங்களுக்கு அனுமதி. அந்தக் கோயில்ல நாங்க பரம்பரைப் பூசாரிங்கிறதாலதான் அந்த அனுமதியும் கொடுத்திருக்காங்க. வெளியூர்க்காரங்களுக்கெல்லாம், எங்க ஊர் கோயில்ல மண்டகப்படி இருக்கு. எங்களுக்கோ கோயில் உள்ள போறதுக்குக்கூட அனுமதி கிடையாது. எங்க ஊர்ல தண்ணீர்ப் பிரச்னை எப்போதும் இருக்கும். பொது டேங்க்குலதான் எங்க வீட்டுப் பொம்பளைங்க தண்ணீர் பிடிக்கப் போவாங்க. அப்பப்போ அவங்களைச் சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி அனுப்புறாங்க. இன்னைக்கு, நேத்து இது நடக்கலை.

தலைமுறை தலைமுறையா குளிச்சிக்கிட்டு இருந்த பச்சிலங்குண்டு குளத்துல குளிக்கவிடாம 2006-ல் பிரச்னை பண்ணினாங்க. `நீங்க குளிச்ச தண்ணி எங்க மேல பட்டாலே தீட்டுடா’னு சொல்லி விரட்டியடிச்சாங்க. அதை எதிர்த்து போலீஸுக்குப் போனோம். ஆனா, பெரிய போராட்டம் நடத்தித்தான் அதுக்கு எஃப்.ஐ.ஆர் போட முடிஞ்சுது. இப்போ எம்.பி-யா இருக்கிற திருநாவுக்கரசரின் சொந்த ஊர் இது. அவர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினாங்க. ஆனாலும் அந்தக் குளத்தில் இப்ப வரைக்கும் எங்களால் குளிக்க முடியலை. அந்தக் குளத்துக்கு நாங்க போறதைத் தடுக்கறதுக்காக, ஏற்கெனவே இருந்த பாதையை அடைச்சுட்டாங்க. சில நாள்களுக்கு முன்னாடி, காளி கோயில்ல மாற்றுச் சமூக இளைஞர்களெல்லாம் சேர்ந்து கிடா வெட்டி பூஜை நடத்துனாங்க. அங்கே இருக்க சாம்பவமூர்த்திக்கு எங்க அண்ணன் கருப்பையா பூசாரிதான் மணி அடிப்பாரு.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

பூஜை பண்ணிட்டு விபூதியை எடுத்து மாற்றுச் சாதியினர்கிட்ட கொடுத்திருக்காரு. அப்போ அவர் கைபட்டுட்டதா சொல்லி அவரை இழிவாப் பேசினதோட எல்லாரும் சேர்ந்து அடிச்சிருக்காங்க. அவர்மீது நடந்த தாக்குதல் தொடர்பா போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவர் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கள் வீட்டுப் பொண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததா பொய் கேஸ் போட்டுட்டாங்க. அந்த வழக்குல என்னையும், என்னோட மகனையும்கூட சேர்த்துட்டாங்க. இந்தப் பிரச்னை நடந்த நிலையில, ஆகஸ்ட் 14-ம் தேதி பூசாரி கருப்பையா காணாமல் போனாரு. அடுத்த நாள் அவரோட உடல் கோயில் மரத்துல ரத்தக்காயத்தோட தொங்குச்சு. மர்மமான இந்த மரணத்துல, போலீஸ் மாற்று சமூகத்தோட தரப்புக்கு ஆதரவாகவே இருந்தாங்க. அதனால் மறு பிரேத பரிசோதனை கேட்டதோடு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாத்தணும்னு நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் மறு பிரேத பரிசோதனையும் நடந்துச்சு. அதுக்கப்புறம்தான் உடலை அடக்கம் செஞ்சோம். சீக்கிரமா இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யால விசாரிக்கப்படும்ணு நம்புறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி நம்மிடம் பேசுகையில், ``அரசு பொது நல்லியில் தண்ணீர் பிடிக்கப் போனேன். அங்கிருந்த மாற்று சாதிப் பெண்கள், `கொன்னும் உங்களுக்கு அறிவு இல்லையா? இப்படியே செஞ்சீங்கன்னா மறுபடியும் கொலை செய்யத் தயங்க மாட்டோம்’னு போலீஸ் இருக்கும்போதே மிரட்டுனாங்க. குளத்துல குளிக்க விடாம பாதையை அடைச்சிட்டாங்க. கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட விடமாட்றாங்க.

சுப்புலட்சுமி
சுப்புலட்சுமி

டீக்கடையில் டீ குடிக்கப் போனா, எங்களுக்குத் தனி டம்ளர்லதான் டீ கொடுப்பாங்க. அதுவும் தரையிலதான் உட்கார்ந்து சாப்பிடணும். எங்களுக்கு தினமும் தீண்டாமைக் கொடுமை நடந்துக்கிட்டுதான் இருக்கு. எங்களுக்கு சாலை வசதி கிடையாது. ஒத்தையடிப் பாதையில்தான் போயிட்டு இருக்கோம். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பித்தான் எங்க தெருவிளக்கை சரிசெஞ்சோம். எங்க பிரச்னைக்குத் தீர்வு கேட்டு அரசு அதிகாரிகளை நாடினால், அவங்களும் நாங்க இப்படித்தான் கெடக்கணும்னு நினைக்கிறாங்கபோல... எந்த நடவடிக்கையும் எடுக்குறது இல்லை. அதனால்தான் நாங்க ஒட்டுமொத்தமா இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செஞ்சிருக்கோம்” என ஆதங்கத்துடன் பேசினார்.

அவர்கள் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``அவங்க அடைச்சு வச்சிருக்கறதா சொல்ற பாதை தனியாருக்குச் சொந்தமானது. அவரோட பட்டா இடத்தை வேலி போட்டு அடைச்சுட்டார். கோயில்ல தீண்டாமை எல்லாம் பார்ப்பதில்லை. மனநலம் பாதித்த எங்க சொந்தக்காரப் பெண்ணிடம் பூசாரி கருப்பையா தவறா நடக்க முயற்சி செஞ்சாரு. அவர்மீது புகார் கொடுத்திருப்பதால், கோயிலில் மணி அடிக்க வேண்டாம்னு சொல்லிட்டோம். அவரோட அண்ணன் மகன்தான் இப்போ மணி அடிக்கிறாரு. அதனால் ஏற்பட்ட விரக்தியில் பூசாரி தற்கொலை செஞ்சுக்கிட்டாரு. அதை கொலைனு நம்ப வைக்க முயற்சி செய்யுறாங்க. நாங்க அவங்களை உறவுக்காரங்களாத்தான் நெனைக்குறோம்” என்கிறார்கள்.

ஊர்க் குளம்
ஊர்க் குளம்

இது பற்றி கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி மனோகரனிடம் இது குறித்துப் பேசினோம். ``கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இங்கே பொறுப்பேற்றேன். இந்த கிராமத்துப் பிரச்னை பற்றிக் கேள்விப்பட்டதும் இங்கே வந்து இரு தரப்பு மக்களிடமும் பேசியிருக்கிறேன். பிரேத பரிசோதனை அறிக்கையில் பூசாரி கருப்பையா தற்கொலை செய்ததாகவே ரிசல்ட் வந்திருக்கிறது. இரு தரப்பையும் சமாதானப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு