Published:Updated:

சென்னை: `5 ஆண்டு காதலில் திடீர் விரிசல்' - மர்மம் விலகாத தொடர் தற்கொலைகள்!

காதல் ஜோடி தற்கொலை
காதல் ஜோடி தற்கொலை ( representational image )

வடசென்னையில் காதலியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார் காதலன். காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது.

சென்னை, தண்டையார்பேட்டை ஸ்ரீரங்கம்மா தெருவைச் சேர்ந்தவர் திவ்யா ( 20). இவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். அதேபோல் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (21). இவர், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். ஐயப்பனும் திவ்யாவும் காதலர்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் இருவராலும் அடிக்கடி நேரிலும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. போனிலேயே பேசிவந்திருக்கிறார்கள். இந்தநிலையில் திவ்யாவின் குடும்பத்திலுள்ள பிரச்னை, காதலர்களுக்கிடையே சில சிக்கல்களை ஏற்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை
Representational Image

இந்தநிலையில் திவ்யாவும் ஐயப்பனும் 27-ம் தேதி போனில் பேசியிருக்கிறார்கள். அப்போது காதலர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே போன் இணைப்பை திவ்யா துண்டித்திருக்கிறார். அதன் பிறகு ஐயப்பன் போன் செய்தபோதும் திவ்யா போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஐயப்பன், திவ்யாவின் தம்பிக்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறார். மேலும், வண்ணாரப்பேட்டையிலிருந்து பைக்கில் திவ்யாவின் வீட்டுக்கு ஐயப்பன் விரைந்து வந்திருக்கிறார். திவ்யாவின் தம்பியும் வீட்டுக்கு வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. திவ்யாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து இருவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போது திவ்யா, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அவரை மீட்ட இருவரும், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு திவ்யாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டு ஐயப்பன் மருத்துவமனையிலேயே கதறி அழுதிருக்கிறார். பின்னர் ஐயப்பன், வீட்டுக்கு வந்திருக்கிறார். திவ்யா, தற்கொலை குறித்து அவரின் அம்மா, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், திவ்யா தற்கொலை குறித்து அவரின் அம்மாவிடம் விசாரித்திருக்கிறார். அப்போது தனது மகள் திவ்யாவும் கல்லூரி மாணவன் ஐயப்பனும் காதலித்த விவரத்தைக் கூறியிருக்கிறார். ஆனால், தன்னுடைய மகளின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational image

திவ்யா தற்கொலைக்கு என்ன காரணம் என்று காதலன் ஐயப்பனிடம் விசாரணை நடத்த தண்டையார்பேட்டை போலீஸார் முடிவு செய்தனர். அந்தச் சமயத்தில் ஐயப்பன், நேற்று காலை, தன்னுடைய வீட்டில் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் தண்டையார்பேட்டை போலீஸாருக்குக் கிடைத்தது. ஐயப்பன் தற்கொலை குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். ஐயப்பனின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் கருதுகின்றனர்.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஐயப்பனின் அம்மா சரஸ்வதி கொடுத்த புகாரில்,``நான் பிரபல ஹோட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்துவருகிறேன். என் கணவர் பெருமாள் ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்களுக்கு மூன்று பிள்ளைகள். மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. என் மகன் ஐயப்பன், கல்லூரியில் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டிவந்தான். எனது மகன் ஐயப்பன், பக்கத்து தெருவிலுள்ள திவ்யா என்ற பெண்ணை காதலித்துவந்ததாகத் தெரியவந்தது. கடந்த 27-ம் தேதி திவ்யா இறந்து விட்டதாகத் தகவல் தெரிந்து ஐயப்பன் அங்கு சென்றான். அதன் பிறகு அவன் ஒரு மாதிரியாக இருப்பதாக அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

என் கணவருக்கு உடல்நலம் சரியில்லாததால், நான் அவருடன் மருத்துவமனையில் தங்கிவிட்டேன். என் மகன் மட்டும் வீட்டில் படுத்துத் தூங்கினான். 28-ம் தேதி 10 மணியளவில் தண்டையார்பேட்டை போலீஸார், திவ்யா இறப்பு சம்பந்தமாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவு திறக்காததால் பக்கத்திலுள்ளவர்களிடம் விசாரித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் கதவைத் தட்டிப் பார்த்து திறக்காததால், எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது என் மகன் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

எஃப்.ஐஆர்
எஃப்.ஐஆர்
சென்னை: `நான் தற்கொலை செய்யப்போகிறேன்' - மனைவிக்கு போன் செய்துவிட்டு உயிரை மாய்த்த போலீஸ் எஸ்.ஐ

இது குறித்து தண்டையார்பேட்டை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``ஐயப்பன், திவ்யா இருவரும் காதலித்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிந்திருக்கிறது. இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் திவ்யா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. திவ்யாவின் தற்கொலை குறித்து அவரின் காதலன் ஐயப்பனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த நேரத்தில், அவரும் தற்கொலை செய்துகொண்டார். அதனால் காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருவரின் செல்போன்களையும் ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

வடசென்னையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு